“மனைவியை அடித்தே கொன்ற கணவன்” - ஆட்டுக் கொட்டகையில் கிடந்த சடலம்.. இரவோடு இரவாக உடலை அடக்கம் செய்ய திட்டம்?

நாகராஜைக் கைது செய்து சித்தோடு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்...
Erode Rajeshwari Murder Case
Erode Rajeshwari Murder Case
Published on: 
Updated on: 
2 min read

ஈரோடு மாவட்டம், சித்தோடு அருகே குடும்பத் தகராறில் மனைவியை கணவர் அடித்துக் கொலை செய்ததாகக் கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த பெண்ணின் உடலை யாருக்கும் தெரியாமல் அடக்கம் செய்ய முயன்றதாகக் கூறப்படும் நிலையில், கணவரைக் கைது செய்த போலீசார், இந்தச் சம்பவத்தில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்றும் விசாரணை நடத்தி வருகின்றனர். ஈரோடு மாவட்டம், சித்தோடு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட நசியனூர் அருகே உள்ள காரைவாய்க்கால் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி 38 வயதான ராஜேஸ்வரி. இந்தத் தம்பதிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

இருவரும் தினக்கூலி அடிப்படையில் அங்குள்ள தறிப்பட்டறை ஒன்றில் நெசவாளர்களாகப் பணியாற்றி வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு(அக் 18) நாகராஜும் ராஜேஸ்வரியும் ஒன்றாக மது அருந்தியதாகக் கூறப்படுகிறது. அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில், நாகராஜ் மனைவி ராஜேஸ்வரியைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் தலை, கழுத்து உள்ளிட்ட உடலின் பல்வேறு பகுதிகளில் காயமடைந்த ராஜேஸ்வரி, வீட்டின் அருகே இருந்த ஆட்டுக் கொட்டகையில் உயிரிழந்ததாகத் தெரிகிறது.

இதையடுத்து, மனைவி உயிரிழந்தது குறித்து வெளியில் தெரியாமல் இருக்க நாகராஜ் குடும்பத்தினருடன் இணைந்து ராஜேஸ்வரியின் உடலை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்த தகவல் வெளியானதைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்குச் சென்ற சித்தோடு போலீசார், ராஜேஸ்வரியின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காகப் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், நாகராஜைக் கைது செய்து சித்தோடு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் மனைவியைத் தாக்கிக் கொன்று விட்டு, சம்பவத்தை மறைக்க முயன்றாரா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், ராஜேஸ்வரியைத் தாக்கியதில் நாகராஜுடன் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்தச் சம்பவத்தில் மேலும் இருவருக்குத் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையிலும் விசாரணை நடைபெறுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆயுத பூஜை முன்தினம் பெண் உயிரிழந்த இந்தச் சம்பவம் ஈரோடு பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com