“தந்தை நடுரோட்டில் அடித்து கொன்ற மகன்” - தலையை பிடித்து தரையில் இடித்த கொடூரம்.. கண்ணை மறைத்த குடிபோதை!

அடிக்கடி குடிபோதையில் வீட்டிற்கு வந்து தந்தையிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது...
Erode Father Murder Case
Erode Father Murder Case
Published on: 
Updated on: 
1 min read

ஈரோடு மாவட்டம் புதுமை காலனியில், குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் பெற்ற தந்தையின் தலையைப் பிடித்து தரையில் மோதித் தாக்கிய மகனால், 75 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக மகனைப் பிடித்த ஈரோடு தெற்கு காவல் நிலைய போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். ஈரோடு புதுமை காலனி, சென்டர் தியேட்டர் அருகே வசித்து வந்தவர் 75 வயதுடைய அப்துல் ரஹீம். பூ வியாபாரம் செய்து வந்த இவருக்கு மூன்று மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர்.

இவரது மூன்றாவது மகன் 37 வயதுடைய சபிக், இருசக்கர வாகனப் பட்டறை ஒன்றில் கூலித் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 8 மாதங்களாகப் பிரிந்து வாழ்ந்து வந்த சபிக், தனது தந்தையின் வீட்டில் தங்கி வந்துள்ளார். மேலும், மது அருந்தும் பழக்கமுடைய இவர், அடிக்கடி குடிபோதையில் வீட்டிற்கு வந்து தந்தையிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று(நவ 12) மீண்டும் குடிபோதையில் வீட்டிற்கு வந்த சபிக், தனது தந்தை அப்துல் ரஹீமிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது இருவருக்கும் இடையே தகராறு முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த சபிக், தந்தையின் தலையைப் பிடித்து தரையில் பலமாக மோதியதுடன், தொடர்ந்து தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த அப்துல் ரஹீம், சிகிச்சைக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த ஈரோடு தெற்கு காவல் நிலைய போலீசார் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர்.தொடர்ந்து, தந்தையைத் தாக்கியதாகக் கூறப்படும் மகன் சபிக்கைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் பெற்ற தந்தையையே மகன் தாக்கியதில், 75 வயது முதியவர் உயிரிழந்த சம்பவம் ஈரோடு புதுமை காலனி பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

 உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.