ஈரோடு ஆர்.என்.புதூர், சூரியம்பாளையம் மாதேஸ்வரன் நகரைச் சேர்ந்தவர் 28 வயதுடைய நந்தினி. இவருக்கு கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் பகுதியைச் சேர்ந்த மாதேஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. பின்னர் கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் இரண்டு ஆண்டுகளிலேயே விவாகரத்து பெற்று இருவரும் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வந்திருக்கின்றனர். எனவே நந்தினி தற்போது தனது பெற்றோர் மற்றும் மகனுடன் ஈரோட்டில் வீடு வசித்து வந்ததாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த 8 மாதங்களுக்கு முன்பு நந்தினிக்கு இன்ஸ்டாகிராம் மூலம் கோகுல் என்ற மற்றொரு நபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் தொடர்ந்து பேசி வந்த நிலையில், இவர்களது பழக்கமானது நாளடைவில் காதலாக மாறியுள்ளது. பின்னர் நந்தினி இதுகுறித்து அவரது பெற்றோரிடம் தெரிவித்து திருமணத்திற்கு சம்மதம் வாங்கியுள்ளார். இதற்கிடையே, தனக்கு அவசரமாகக் கடன் பிரச்சினை இருப்பதாகக் கூறி கோகுல் ரூ.3 லட்சம் கேட்டுள்ளார். இதனை நம்பிய நந்தினி, ஆக்சிஸ் வங்கியில் தனிநபர் கடன் பெற்று ரூ.2 லட்சத்து 54 ஆயிரத்தை மூன்று தவணைகளாக கூகுள் பே மூலம் அனுப்பியுள்ளார்.
மேலும், அவ்வப்போது சிறுக சிறுக சுமார் ரூ.2 லட்சம் வரை பணம் கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார். இதுமட்டுமின்றி, கடந்த மாதம் தனது வங்கிக் கணக்கு மூலம் தவணை முறையில் விலை உயர்ந்த ஐபோன் ஒன்றையும் வாங்கிக் கொடுத்துள்ளார். இதையடுத்து, கடந்த (பிப் 24) ஆம் தேதி அன்று கோகுல், நந்தினியை சென்னைக்கு அழைத்துச் சென்று, பாரிமுனை தம்பு செட்டித் தெரு அருகே உள்ள பெரியமேடு பத்ரகாளி அம்மன் கோவிலில் திருமணம் செய்துகொண்டதாக நந்தினி தெரிவித்துள்ளார்.
திருமணத்திற்குப் பிறகு இருவரும் ஈரோடு திரும்பிய நிலையில், கோகுல் ஊரில் ஒரு பிரச்சினை இருப்பதாகக் கூறிச் சென்றுள்ளார். ஆனால் மீண்டும் அவர் திரும்பி வரவில்லை என சொல்லப்படுகிறது. இதுகுறித்து நந்தினி விசாரித்தபோது தான், கோகுல் ஏற்கெனவே மற்றொரு பெண்ணுடன் வாழ்ந்து வருவது தெரியவந்ததாகவும், தன்னைப் போலவே திருமண வாழ்க்கையில் பிரச்சினைகளைச் சந்தித்த பெண்களிடம் பழகி பணம் பெற்று ஏமாற்றி வருவது தெரிவந்ததாகவும் நந்தினி கூறியுள்ளார்.
இதேபோல் பாதிக்கப்பட்ட திருப்பூரைச் சேர்ந்த ரோஹினி என்ற பெண்ணும் தன்னிடம் இதுகுறித்துத் தெரிவித்ததாகக் கூறியுள்ளார். இதற்கிடையே, வங்கிக் கடன் தவணைகளைச் செலுத்துமாறு தொடர்ந்து வலியுறுத்தியதையடுத்து, கடந்த (17.08.2026) அன்று ரூ.1 லட்சமும், (18.10.2026) அன்று ரூ.50 ஆயிரமும் கோகுல் தரப்பிலிருந்து வழங்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். இருப்பினும், மீதமுள்ள கடன் தொகையையும் வட்டி மற்றும் அபராதத்தையும் செலுத்துமாறு கேட்டபோது, பணம் தர முடியாது எனக் கூறி தகாத வார்த்தைகளால் கோகுல் திட்டியுள்ளார்.
மேலும் ஆள் வைத்து கடத்திக் கொலை செய்து தடயமின்றி அழித்துவிடுவதாகவும் மிரட்டியதாக சொல்லப்படுகிறது. இதனால் அச்சமடைந்த நந்தினி இது குறித்து காவல் நிலையத்தில் புகாரளித்ததுடன், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விழிப்புணர்வு வீடியோ ஒன்றைப் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த கோகுல் மற்றும் அவரது குடும்பத்தினர் தொடர்ந்து, வெவ்வேறு தொலைபேசி எண்களில் இருந்து தொடர்புகொண்டு, அந்த வீடியோவை நீக்குமாறு மிரட்டல் விடுப்பதாகவும் நந்தினி தெரிவித்துள்ளார்.
எனவே, தன்னைத் திருமணம் செய்துகொண்டு பணம் மற்றும் ஐபோன் பெற்றுக்கொண்டு ஏமாற்றியதாகக் கூறப்படும் கோகுல் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்ததாகக் குற்றம்சாட்டப்படும் குடும்பத்தினர் மீது உரிய விசாரணை நடத்தி சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இழந்த பணத்தை மீட்டுத் தருவதுடன் தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் நந்தினி கோரிக்கை விடுத்துள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்