

ராமநாதபுரம் வைகை நகர் பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக மனைவி மற்றும் மாமியாரை அரிவாளால் வெட்டிக்கொலை செய்துவிட்டு, அதே அரிவாளுடன் காவல் நிலையத்தில் சரணடைந்ததாகக் கூறப்படும் அதிர்ச்சி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த இரட்டை கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ராமநாதபுரம் வைகை நகர் பகுதியைச் சேர்ந்த செல்லமுத்து வெளிநாட்டில் பணியாற்றி வந்ததாகக் கூறப்படுகிறது. அவரது மனைவி சர்மிளா. மேலும், சர்மிளாவின் தாயார் பத்மாவதி அரசு ஆசிரியராக பணியாற்றி வந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. போலீசாரின் முதற்கட்ட விசாரணையின் போது, செல்லமுத்து மற்றும் அவரது மனைவி சர்மிளா இடையே கடந்த சில காலமாக குடும்பப் பிரச்சினை மற்றும் அடிக்கடி தகராறு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று காலை இருவருக்கும் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது.
இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த செல்லமுத்து, வீட்டில் மறைத்து வைத்திருந்ததாகக் கூறப்படும் அரிவாளை எடுத்து, தனது மனைவி சர்மிளா மற்றும் மாமியார் பத்மாவதி ஆகியோரை சரமாரியாக வெட்டியதாக போலீசார் தெரிவித்தனர். பலத்த காயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இரட்டைக் கொலைச் சம்பவத்திற்குப் பிறகு, செல்லமுத்து நேரடியாக ராமநாதபுரம் கேணிக்கரை காவல் நிலையத்திற்கு சென்று, கொலையில் பயன்படுத்தியதாக கூறப்படும் அரிவாளுடன் சரணடைந்துள்ளார். இதையடுத்து அவரை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டனர். தடயவியல் நிபுணர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்தில் ஆதாரங்களை சேகரித்ததுடன், உயிரிழந்த இருவரின் உடல்களும் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த தம்பதியருக்கு இரண்டு குழந்தைகள் இருப்பதாக கூறப்படுகிறது. தாயின் உடலைக் கண்டு குழந்தைகளும், தகவலறிந்து வந்த உறவினர்களும் கதறி அழுத சம்பவம் அங்கிருந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
இந்த வழக்கின் முதற்கட்ட விசாரணையில், குடும்பப் பிரச்சினையே இந்த இரட்டை கொலைக்கு காரணமாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும், மனைவிக்கு திருமணத்திற்கு புறம்பான உறவு இருந்ததாக செல்லமுத்து கூறி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், இந்த தகவல் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. இதுதொடர்பாக அனைத்து கோணங்களிலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த இரட்டை கொலை சம்பவம் ராமநாதபுரம் பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.