
திருச்சி மாவட்டம், லால்குடி புறத்தாக்குடி பகுதியை சேர்ந்தவர் 54 வயதுடைய ஆரோக்கியசாமி. இவர் முகநூலில் கேப்பிட்டல் பைனான்ஸ் என்ற நிதி நிறுவனத்தின் லோன் விளம்பரத்தை பார்த்து அதில் உள்ள செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு கடன் பெறுவது குறித்து விவரம் கேட்டுள்ளார். அதற்கு எதிர் தரப்பிலிருந்து பேசிய நிதி நிறுவன ஊழியர் ஒருவர் ஆவணக் கட்டணம், விண்ணப்ப கட்டணம் என பல காரணங்களை கூறி பணம் கேட்டுள்ளார். இதை நம்பிய ஆரோக்கியசாமி ரூ.1 லட்சத்தை அவர்கள் சொன்ன வாங்கி கணக்கிற்கு அனுப்பியுள்ளார்.
பின்னர் அதே எண்ணிற்கு போன் செய்யும்போது போன் எடுக்காமலும் லோன் குறித்து சரிவர விவரங்கள் சொல்லாமலும் அலைக்கழித்து வந்துள்ளனர். மேலும் கடன் பணமும் தராமல், அவர் அனுப்பிய பணத்தையும் திருப்பி தராமல் மோசடி செய்து ஏமாற்றி வந்துள்ளனர். எனவே இது தொடர்பாக ஆரோக்கியசாமி திருச்சி மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நிதி நிறுவனம் குறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் உத்தரவின் பேரில் காவல் ஆய்வாளர் சுமதி தலைமையில் ஒரு தனிப்படை அமைத்து தேடி வந்தனர். விசாரணையில் அவர்கள் பயன்படுத்திய செல்போன் எண்களை ஆய்வு செய்ததில் மோசடியில் ஈடுபட்டவர்கள் திருப்பூரில் இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்படையினர் அங்கு சென்று திருப்பூர் பிச்சம்பாளையம் புதூர் பகுதியை சேர்ந்த ஸ்ரீனிவாசன் (43), கணபதி (43), அவரது மனைவி கவிதா(32) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
மேலும் அவர்கள் பயன்படுத்திய 10 செல்போன்கள், 1 லேப்டாப், மோடம், 10 சிம் கார்டு மற்றும் வங்கி கணக்கு புத்தகங்கள் ஆகியவை பறிமுதல் செய்தனர். இது போல பல மோசடிகளை இவர்கள் செய்து வந்தது விசாரணையில் தெரிவந்துள்ளது மேலும் நம்பிக்கையில்லாத மற்றும் அங்கீகரிக்கப்படாத செயலிகளில் கடன் வாங்குவதை மக்கள் நிறுத்த வேண்டும் என போலீசார் அறிவுறுத்தியுள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.