“மகனை ஓட ஓட அடித்து கொன்ற தந்தை” - ஏழு வருடங்களாக அனுபவித்த சித்திரவதைகள்.. தாயின் கண்முன்னே நடந்த பயங்கரம்!

பயந்துபோய் தோட்டத்திற்குள் ஓடிய பார்த்திபனைத் துரத்திச் சென்ற நடராஜன், அவரது தலையில் பலமாகத் தாக்கியுள்ளார்...
தந்தை நடராஜன் கொலைசெய்தவர், மகன் பார்த்திபன் கொலைசெய்யப்பட்டவர்
தந்தை நடராஜன் கொலைசெய்தவர், மகன் பார்த்திபன் கொலைசெய்யப்பட்டவர்
Published on
Updated on
1 min read

திருச்சி மாவட்டம், சமயபுரம் காவல் எல்லைக்குட்பட்ட புறத்தாக்குடி கிராமம், நோவா நகரைச் சேர்ந்தவர் 52 வயதுடைய நடராஜன். அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் மலைக்கோட்டை பணிமனையில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு 2014-இல் உடல்நலக் குறைவு ஏற்பட்ட நிலையில் பணியை ராஜினாமா செய்துவிட்டு, தற்போது தனது மனைவியான 48 வயதுடைய இளஞ்சியத்துடன் சேர்ந்து விவசாயம் செய்து வருகிறார். இவர்களுக்கு 32 வயதுடைய பார்த்திபன் என்ற மகனும், 28 வயதில் பிரியா என்ற மகளும் உள்ளனர். மகளுக்கு திருமணமான நிலையில் மகன் பார்த்திபன் எலக்ட்ரிக்கல் மற்றும் பிளம்பிங் வேலை செய்து வந்தார்.

சிறுவயதில் இருந்தே மது அருந்தும் பழக்கம் உடைய இவர் கடந்த ஏழு வருடங்களாக மது அருந்தும் போதெல்லாம் தனது பெற்றோர் மற்றும் தங்கையை அடித்துத் துன்புறுத்தி வந்துள்ளார். மேலும், தனது வருமானம் குடிப்பதற்கே போதாததால், ஆன்லைனிலும் வெளிநபர்களிடமும் கடன் வாங்கியுள்ளார். கடன் கொடுத்தவர்கள் பணத்தை திரும்பக் கேட்டு நெருக்கடி கொடுத்ததால், தனது தந்தை நடராஜனிடம் சொத்துக்களை விற்று பணம் தருமாறு போதையில் அடிக்கடி தகராறு செய்துள்ளார். தற்போது ஈரோட்டில் வேலை பார்த்து வந்த பார்த்திபன்,நேற்று முன்தினம் காலை மதுபோதையில் வீட்டுக்கு வந்துள்ளார்.

அப்போது தனது தாய் இளஞ்சியத்திடம் நிலத்தை விற்று பணம் தருமாறு மிரட்டி, அவரைத் தாக்கியுள்ளார். இதைக் கண்ட நடராஜன், மகனைத் தடுத்து அங்கிருந்து அனுப்பி வைத்த நிலையில், மீண்டும் நேற்று மாலை கடும் போதையில் வந்த பார்த்திபன், தந்தை நடராஜனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரைத் தாக்கியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த நடராஜன், அருகில் இருந்த இரும்புக் குழாயை எடுத்துப் பார்த்திபனை அடித்து துரத்தியுள்ளார். பயந்துபோய் தோட்டத்திற்குள் ஓடிய பார்த்திபனைத் துரத்திச் சென்ற நடராஜன், அவரது தலையில் பலமாகத் தாக்கியுள்ளார்.

இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த பார்த்திபன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மகன் இறந்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்த நடராஜன், உடனடியாகச் சமயபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த சமயபுரம் போலீசார், தந்தை நடராஜனைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com