
புதுக்கோட்டை திருமயம் பகுதியை சேர்ந்தவர் 36 வயதான கணேசன், இவருக்கு திருமணமாகி நான்கு குழந்தைகள் இருக்கும் நிலையில் மனைவி, பிள்ளைகள் மற்றும் கணேசனின் தாய் தந்தை என அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். கணேசன் அதே பகுதியில் உள்ள ஒரு கடையில் புரோட்டா மாஸ்டராக வேலை செய்து வந்துள்ளார்.
மதுவிற்கு அடிமையான கணேசன் தினந்தோறும் குடித்துவிட்டு வந்து வீட்டில் இருக்கும் அனைவரையும் போட்டு அடிப்பது சண்டை இழுப்பது என கலாட்டா செய்து வந்துள்ளார். கணேசனின் தந்தையான கிருஷ்ணன் எத்தனை முறை அறிவுரை கூறியும் அவர் திருந்தாமல் தொடர்ந்து குடித்து வந்துள்ளார். இதுபோல் கடந்த சில தினங்களுக்கு முன்பு குடித்துவிட்டு வந்து வீட்டில் அனைவரிடமும் சண்டை போட்டுள்ளார்.
தேவையற்ற வார்த்தைகளை சொல்லி மனைவியையும் குழந்தைகளையும் திட்டிவிட்டு மாடிக்கு தூங்க சென்றுள்ளார். ஏற்கனவே கணேசன் குடித்துவிட்டு வருவதால் கடும் மன உளைச்சலில் இருந்த தந்தை கிருஷ்ணன் அன்று நடந்த சண்டையில் ஆத்திரம் அடைந்துள்ளார். எனவே இரவு அனைவரும் தூங்க சென்ற பிறகு மகனின் காலை உடைத்து அவரை திருத்த எண்ணி கிருஷ்ணன் இரும்பு கம்பி எடுத்து கொண்டு மாடிக்கு சென்றுள்ளார்.
மாடியில் கணேசன் உடல் முழுவதும் போர்வை போர்த்தி தூங்கிக்கொண்டு இருந்துள்ளார். இதனால் ஆத்திரத்தில் இருந்த கிருஷ்ணன் தலை எது கால் எது என தெரியாமல் சரமாரியாக தாக்கியுள்ளார். அடித்து ரத்தம் வந்த பிறகுதான் கவனித்துள்ளார் தலையில் அடித்ததை பின்னர் என்ன செய்வதென்று தெரியாமல் மீண்டும் சென்று வழக்கம் போல் உறங்கியுள்ளார்.
காலையில் மாடிக்கு சென்ற கணேசனின் மகன் தந்தையின் நிலையை பார்த்து அலறி உள்ளார். இதை கேட்டு வந்த குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கணேசனின் உடலை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர். அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களை வைத்து வெளியில் இருந்து யாரும் வரவில்லை என்பதை உறுதிப்படுத்தினர்.
எனவே குடும்பத்தார் மற்றும் உறவினர்கள் மீது சந்தேகமடைந்த போலீசார் அனைவரிடமும் விசாரணை நடத்தியுள்ளனர். அதில் கிருஷ்ணனின் மீது சந்தேகம் அடைந்து தீவிர விசாரணை நடத்தியதில் மகனை கொலை செய்ததை கிருஷ்ணன் ஒப்புக்கொண்டுள்ளார். தந்தையே மகனை அடித்து கொன்றது அப்பகுதியில் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.