அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில், பள்ளியில் படிக்கும் 17 வயது மாணவனுடன் தகாத உறவில் இருந்ததாகக் கூறப்படும் 20 வயது பெண் ஆசிரியர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவரின் தாயார் அளித்த தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில், ஆசிரியர் மீதான குற்றச்சாட்டுகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
புளோரிடாவின் ஹெர்னாண்டோ கவுண்டி பகுதியில் உள்ள ஓரு பள்ளியில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. மியா அசெவெடோ கல்லார்டோ என்ற 20 வயது பெண் ஆசிரியர், கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதி முதல் நவம்பர் 4-ம் தேதி வரை அந்தப் பள்ளியில் தற்காலிக ஆசிரியராகப் பணியாற்றி வந்துள்ளார். அப்போது அங்கு படித்து வந்த 17 வயது மாணவருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், மியாவிற்கும் மாணவருக்கும் இடையே தகாத உறவு இருப்பதாக கடந்த நவம்பர் 5-ம் தேதி ஹெர்னாண்டோ கவுண்டி ஷெரிப் அலுவலகத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. இதற்கிடையில், நவம்பர் 4-ம் தேதி மாணவரின் செல்போனை அவரது தாயார் சோதனை செய்தபோது, ஆசிரியருடைய ஆபாச புகைப்படங்கள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இதையடுத்து இந்த விவகாரம் வெளியே தெரியவந்துள்ளது. அந்த மாணவரிடம் நடத்திய விசாரணையில், கடந்த சில மாதங்களாக இருவரும் காதல் உறவில் இருந்து வந்ததாக தெரியவந்துள்ளது. மேலும், அக்டோபர் 31-ம் தேதி டீச்சர், மியாவின் காரின் பின்புற இருக்கையில் இருவரும் பாலியல் உறவில் ஈடுபட்டதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து மாணவரின் செல்போனை கொண்டு தடயவியல் ஆய்வு நடத்தியுள்ளது போலீஸ். அதில், மாணவருடன் பாலியல் செயல்களில் ஈடுபடுவது குறித்து ஆசிரியர் பல்வேறு குறுஞ்செய்திகளைப் பகிர்ந்திருந்தது கண்டறியப்பட்டதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, மாணவரின் முதல் பாலியல் அனுபவம் சிறப்பானதாக இருக்க வேண்டும் என்றும், காரில் பாலியல் உறவில் ஈடுபடுவது குறித்தும் இருவரும் பேசியதாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில், விசாரணை தீவிரமடைந்த நிலையில், மியா நவம்பர் 4-ம் தேதி தனது ஆசிரியர் பணியை ராஜினாமா செய்துள்ளார். தொடர்ந்து, நவம்பர் 11-ம் தேதி காவல்துறை அவரை கைது செய்துள்ளது.
மாணவருடன் முறையற்ற உறவை ஏற்படுத்த முயன்றது, சிறுவர்களுக்கு ஆபாச மெசஜ் அனுப்பியது. தகவல் தொடர்பு சாதனத்தை சட்டவிரோதமாக பயன்படுத்தியது என மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தற்போது அவர் 1,05,000 அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.94 லட்சம்) பிணைத்தொகையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும், பாதிக்கப்பட்ட மாணவர் அல்லது வேறு எந்த மாணவர்களுடன் தொடர்பு கொள்ளக்கூடாது என்றும், இணைய வசதி கொண்ட மின்னணு சாதனங்களைப் பயன்படுத்தக்கூடாது என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்