

‘அமெரிக்கன் ஐடல்’ என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றவரும், முன்னாள் தேவாலய போதகருமான காலேப் ஃபிளின், தன்னுடைய கள்ளகாதலிக்காக தன் மனைவியை கொலை செய்ததற்காக அவர் தற்போது குற்றவாளி என்று தீர்ப்பளிக்கபட்டுள்ளார்.
40 வயதான கணவரும் (காலேப் ஃபிளின்), இரண்டு பதின்மவயது பெண் குழந்தைகளின் தந்தையுமானவர் இவர். கடந்த பிப்ரவரி 16 அன்று தனது மனைவி ஆஷ்லியைச் சுட்டுக் கொன்றதை மறைப்பதற்காக, டிப் சிட்டியில் உள்ள தங்களது வீட்டில் ஒரு போலியான கொள்ளைச் சம்பவத்தை நிகழ்த்தியதாக, மியாமி கவுண்டி நடுவர் குழு இரண்டரை மணி நேரம் ஆலோசித்த பிறகு இவரது வழக்கில் தீர்ப்பினை கூறியுள்ளது.
தன்னை குற்றவாளி என்று தீர்பளித்த பின்னர், கதறி அழுத ஃபிளின், தன்னைச் சமநிலைப்படுத்தப் போராடியபோதிலும், நீதிபதி அவர் மீது சுமத்தப்பட்ட 11 குற்றசாட்டுகளை வைத்து அவர்தான் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டது. அந்தக் குற்றச்சாட்டுகளில், ஆதாரங்களைத் திரித்தல் உட்பட கொடூரமான கொலைக் குற்றமும் அடங்கும் எனக் கூறப்பட்டுள்ளது. இந்தக் குற்றத்திற்காக அவருக்குப் பரோல் வழங்க வாய்ப்பே இல்லாமல் சிறைத்தண்டனை கிடைக்கக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.
குற்றம் நடந்தபோது, ஆஷ்லி 9மிமீ கைத்துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளார். ஆனால் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட அந்த ஆயுதமானது, ஒருபோதும் மீட்கப்படவில்லை என்றும் கூறப்டுகிறது. இதற்கிடையில், ஃபிளின் வழக்கமாகத் தனது டிரக்கில் வைத்திருக்கும் 9மிமீ கைத்துப்பாக்கியும் அதே சமயத்தில் காணாமல் போயிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஃப்ளின் இசை போதகராக பணியாற்றிய தேவாலயத்தில், 2022-ம் ஆண்டு 20 வயது பயிற்சிப் பணியாளராக இருந்த 24 வயது அல்லீஹா போட்னரைச் சந்தித்துள்ளார். அந்த பழக்கமானது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. அவருடன் பல ஆண்டுகளாக நீடித்த கள்ள உறவுக்குப் பிறகு, ஃப்ளின் தனது மனைவியை கொள்வது என்ற கொடூரமான திட்டத்தைத் தீட்டியுள்ளார் என்று அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், ஃப்ளின் தன் மனைவி இறக்க வேண்டும் என்றும், "அவரை கொலை செய்தால் குற்றத்திலிருந்து எப்படித் தப்பிப்பது?" என்று யோசித்துக்கொண்டிருந்ததையும் போட்னர் நீதிமன்றத்தில் வாசிக்க நிர்பந்திக்கப்பட்டுள்ளார். கொலை நடப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, ஃபிளின் தனது காதலிக்கு, “நான் உன்னைத் தேர்ந்தெடுக்கிறேன். நான் சுதந்திரமாக இருக்கிறேன். அடுத்தகட்ட நடவடிக்கைகள் நாளை வரும்,” என்று குறுஞ்செய்தி அனுப்பியதாகக் கூறப்படுகிறது.
ஃப்ளினின் வழக்கறிஞர் அவரை கொலையாளி இல்லை என்றும், புலனாய்வாளர்கள் கொலை செய்ய பயன்படுத்திய ஆயுதத்தை இதுவரை மீட்கவில்லை என்பதையும், அவர்தான் தன் மனைவியைக் கொன்றார் என்பதற்கு தடயவியல் சான்றுகள், நேரில் கண்ட சாட்சிகளின் வாக்குமூலம் அல்லது வேறு நேரடி ஆதாரங்கள் இல்லை என்பதையும் நீதிமன்றத்தில் கூறியுள்ளார்.
தற்போது இவரது வழக்கில் வரும் அக்டோபர் 5-ம் தேதி தண்டனைத் தீர்ப்பு வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்