
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே தொழிலில் பங்குதாரராக சேர்ப்பதாக கூறி கடத்திச் சென்று சித்ரவதை செய்வதாக பெண் ஒருவர் கண்ணீர் மல்க வெளியிட்டுள்ள வீடியோ குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
திருப்பூர் அருகேயுள்ள வடுகபாளையம் பகுதியை சேர்ந்தவர் பிரவீனா. இவர் அண்மையில், அழுதபடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தான் பியூட்டி பார்லர் நடத்தி வருவதாகவும், பார்லருக்கு வேலப்பகவுண்டன்பாளையம் பகுதியை சேர்ந்த தமிழ்ச்செல்வி என்பவர் அடிக்கடி வரும் நிலையில் இருவரும் நெருங்கி பழகியதாகவும் கூறியுள்ளார். அப்போது தமிழ்செல்வி தனது கணவன் சிவக்குமார் டெக்ஸ்டைல்ஸ் தொழில் செய்து வருவதாகவும், அதன் மூலம் நிறைய பணம் சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தை கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனை உண்மையென நம்பி, தனது வீட்டின் பத்திரத்தை கொடுத்ததாகவும், ஆனால் அவர்கள் அதனை 3 கோடி ரூபாய்க்கு அடமானம் வைத்ததாகவும் புகார் தெரிவித்துள்ளார். அது குறித்து கேட்ட தன்னை கடத்தி சென்று திருச்சியில் வைத்து சித்ரவதை செய்வதாகவும் கண்ணீர் மல்க வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பொதுமக்களிடையே அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
இதனிடையே பிரவீனாவின் மகள் தனது தாயை காணவில்லை என்று பல்லடம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் பல்லடம் போலீசார் பெண் மாயம் என வழக்கு பதிவு செய்து மாயமாகியுள்ள பிரவீனாவையும் அவர் வீடியோவில் குறிப்பிட்டவர்களையும் வலை வீசி தேடி வருகின்றனர்.