

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே உள்ள பிரம்மதேசம் பகுதியில் 16 வயது சிறுமி மீது பாலியல் வன்கொடுமை நடைபெற்றதாக கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் பிள்ளையார்பாளையம் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளியின் மகளான 16 வயது சிறுமி, உடல்நலக்குறைவு காரணமாக காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு மருத்துவர்கள் மேற்கொண்ட பரிசோதனையில், சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மருத்துவமனை நிர்வாகம் போலீசாருக்கு தகவல் அளித்தது.
போலீசார் நடத்திய விசாரணையில், சிறுமி தனது தாத்தா பாட்டியை பார்க்க செய்யாறு அருகே உள்ள கல்பட்டு கிராமத்திற்கு தனியாக சென்றதாக தெரிவித்துள்ளார். அப்போது, தனியாக வந்ததை கவனித்த சிலர் சாலை ஓரத்தில் மறைந்திருந்து, அவரை பின்தொடர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக சிறுமி தெரிவித்தார். சம்பவத்திற்குப் பிறகு குற்றவாளிகள் தப்பிச் சென்றுள்ளனர். இதுகுறித்து காஞ்சிபுரம் போலீசார், பிரம்மதேசம் போலீசாருக்கு தகவல் அளித்ததைத் தொடர்ந்து, சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, சந்தேகிக்கப்படும் சில இளைஞர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கு POCSO சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு, விசாரணை வேகமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், தேசிய மகளிர் ஆணையம் இந்த சம்பவத்தை தாமாக முன்வந்து எடுத்துக்கொண்டு விசாரணை தொடங்கியுள்ளது. மேலும், இந்த வழக்கில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விரிவான அறிக்கையை 5 நாட்களுக்குள் தமிழக காவல்துறை தலைமையகத்துக்கு, குறிப்பாக டிஜிபி சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளது.
மேலும், பெண்கள் மற்றும் சிறுமிகள் மீதான வன்முறைகள் மனித உரிமைகளின் கடுமையான மீறல் என்றும், இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க முன்கூட்டியே பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் அவசியம் எனவும் மகளிர் ஆணையம் வலியுறுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, அவரது குடும்பத்தினருக்கும் தேவையான உளவியல் ஆலோசனைகள் மற்றும் முழுமையான ஆதரவு வழங்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்