சிறுமிகளுக்கு பரிசு கொடுப்பதாக பாலியல் வன்கொடுமை.. “37 வருடங்களுக்கு பின் பெண் வாக்குமூலம்” - வீரமணி வழக்கில் புதிய ஆதாரம்!

ஒரு சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படும் காணொளி அடங்கிய பென் டிரைவ் காவல்துறையினரிடம் கிடைத்தது.
சிறுமிகளுக்கு பரிசு கொடுப்பதாக பாலியல் வன்கொடுமை.. “37 வருடங்களுக்கு பின் பெண் வாக்குமூலம்” - வீரமணி வழக்கில் புதிய ஆதாரம்!
Published on
Updated on
1 min read

பிரபல கிரானைட் தொழிலதிபரும், ஜெம் குழுமத்தின் தலைவருமான 84 வயதுடைய வீரமணிக்கு எதிரான போக்சோ வழக்கில், தற்போது 50 வயதாகும் பெண் ஒருவர், தனக்கு 13 வயதாக இருந்தபோது வீரமணி தன்னிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியதாக விசாரணை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளதாக, காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சிறுமியாக இருந்தபோது வீரமணி தன்னை அணுகி, பரிசுப் பொருட்கள் மற்றும் புதிய ஆடைகள் வாங்கித் தருவதாகக் கூறி பாலியல் வன்கொடுமை செய்ததாக அவர் புலனாய்வாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, தன்னைப் போலவே ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த மேலும் சில சிறுமிகளையும் வீரமணிக்கு அறிமுகப்படுத்தியதாக அந்தப் பெண் போலீசாரிடம் தெரிவித்துள்ளர். ஒரு சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படும் காணொளி அடங்கிய பென் டிரைவ் காவல்துறையினரிடம் கிடைத்ததைத் தொடர்ந்து வீரமணி மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் வீரமணி மற்றும் ஒரு தம்பதியினர் கடந்த ஆகஸ்ட் 29ஆம் தேதி மத்திய குற்றப்பிரிவின் ஒழுக்கக்கேடு தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்.

ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒழுக்கக்கேடு தடுப்புப் பிரிவை அணுகியதைத் தொடர்ந்து, கடந்த 2025ஆம் ஆண்டு அக்டோபரில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆரம்பகட்ட விசாரணையில் காணொளியில் இடம்பெற்றிருந்த சிறுமியை காவல்துறையினரால் அடையாளம் காண முடியாததால், வழக்கை முடித்து வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையே, சிறப்பு போக்சோ நீதிமன்றம் அந்த முடிவு அறிக்கையை நிராகரித்து, வழக்கில் மேலும் விசாரணை நடத்த உத்தரவிட்டது. இதையடுத்து காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தி வீரமணியை கண்டறிந்து கைது செய்தனர்.

தொடர்ந்து, அந்தக் காணொளியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பெண்ணையும் காவல்துறையினர் கண்டுபிடித்தனர். தற்போது 21 வயதாகும் அந்தப் பெண்ணின் வாக்குமூலம் நீதிபதி முன்னிலையில் பதிவு செய்யப்பட்டது. மேலும், சிறுவயதில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகக் கூறிய மேலும் 7 பெண்களின் வாக்குமூலங்களும் நீதிபதி முன்னிலையில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் வீரமணி மற்றும் அவருடன் தொடர்புடையதாகக் கூறப்படும் இருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும் வழக்கு தொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com