

காதலித்து வந்த பெண்ணை வேறொருவருக்கு திருமணம் செய்து வைத்துவிட்டு, சில நாட்களிலேயே அவருடன் வீட்டை விட்டு சென்றதாக கூறப்படும் சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.
வேலூர் மாவட்டம் மேல்பாடி அருகே உள்ள சிவபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கஜேந்திரன். 34 வயதான இவருக்கு நீண்ட நாட்களாக திருமணம் ஆகாததால், அவரது அண்ணன் ஜெய்சங்கர், சென்னையில் கட்டுமானத் தொழில் செய்து வந்த நிலையில், தம்பிக்கு பெண் பார்த்து வந்துள்ளார். அப்போது, ஜெய்சங்கரிடம் பெயிண்டராகவும், அவ்வப்போது கார் ஓட்டுநராகவும் வேலை செய்து வந்த சென்னை சேர்ந்த முனுசாமி, தனது உறவுக்கார பெண் ஒருவர் இருப்பதாகவும், சிறுவயதில் இருந்து நாங்கள் தான் வளர்த்ததாகவும் கூறியுள்ளார். "திருமணத்திற்குத் தேவையான நகை உள்ளிட்ட வசதிகள் எங்களிடம் இல்லை" என முனுசாமி தெரிவித்த நிலையில், பெண்ணுக்கும் விருப்பம் இருந்தால் திருமணம் செய்து வைக்கலாம் என்று ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
அதன்படி, மணமகளுக்குத் தேவையான நகைகள், திருமணப் பட்டு, திருமணப் பொருட்கள் உள்ளிட்ட அனைத்தையும் ஜெய்சங்கர் தனது சொந்த செலவில் சுமார் ரூ.4 லட்சம் வரை செலவழித்து, கடந்த மாதம் 7-ஆம் தேதி சோளிங்கரில் உள்ள முருகன் கோவிலில் உறவினர்கள் முன்னிலையில் அபிநயா என்ற அந்த பெண்ணிற்கும் அவரது சகோதரர் கஜேந்திரனுக்கும் திருமணம் நடத்தி வைத்துள்ளார். இந்த திருமணத்தில் பெண் வீட்டார் சார்பில் முனுசாமி மற்றும் அவரது தாயார் ஜோதி மட்டுமே கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. நீண்ட நாள் கழித்து தம்பிக்கு திருமணம் முடிந்த மகிழ்ச்சியில், ஜெய்சங்கர் மணமக்களுக்கு தொடர்ந்து குடும்பச் சடங்குகளையும் ஏற்பாடு செய்துள்ளார். ஆனால், திருமண வாழ்க்கை ஒரே ஒரு நாள் மட்டுமே சுமுகமாக இருந்ததாக கூறப்படுகிறது.
திருமணமான மறுநாளிலிருந்தே அபிநயா, கணவர் கஜேந்திரனிடம் அன்பாகப் பேசாமல் இருந்ததுடன், எப்போதும் தனது மாமா முனுசாமியுடனேயே அதிகமாக பேசி வந்ததாக குடும்பத்தினர் குற்றம்சாட்டுகின்றனர். சுமார் 15 நாட்கள் இவ்வாறு பிரச்சினைகளுடன் திருமண வாழ்க்கை நீடித்த நிலையில், ஒரு நாள் நள்ளிரவில் அபிநயா வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இதையடுத்து, மேல்பாடி காவல் நிலையத்தில் அபிநயா காணாமல் போனதாக கஜேந்திரன் குடும்பத்தினர் புகார் அளித்துள்ளனர். புகாரைப் பெற்றுக் கொண்ட உதவி ஆய்வாளர் குமரன், அவரை கண்டுபிடித்து விடலாம் என்று கூறி அனுப்பியதாக தெரிவிக்கப்படுகிறது.
பின்னர், அபிநயா தனது மாமா முனுசாமியுடன் காவல் நிலையத்தில் ஆஜராகி, "இனிமேல் கஜேந்திரனுடன் வாழப் போவதில்லை. என் மாமா முனுசாமியுடன்தான் வாழப் போகிறேன்" என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதன் பிறகுதான் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்ததாக கஜேந்திரன் மற்றும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து முனுசாமியிடம் ஜெய்சங்கர் கேள்வி எழுப்பியபோது, காவல் நிலையத்தில் இருந்த உதவி ஆய்வாளர் குமரன், "அந்த பெண் வரவில்லை என்று சொன்னால் விட்டுவிட்டு போக வேண்டியதுதானே" என்று கூறி, தங்களிடம் ஆபாசமாகவும் தரக்குறைவாகவும் பேசியதாகவும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதனால் அங்கு நியாயம் கிடைக்காது என கருதிய கஜேந்திரன், தனது தாயாருடன் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் புகார் மனு அளித்துள்ளார். அந்த மனுவில், தன்னை ஏமாற்றி தனது காதலியான அபிநயாவையே திருமணம் செய்து வைத்து மோசடி செய்ததாக கூறி, முனுசாமி, அபிநயா மற்றும் முனுசாமியின் தாயார் ஜோதி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், திருமணத்திற்காக செலவிட்ட ரூ.4 லட்சம், நகைகள் மற்றும் திருமணப் பொருட்களை மீட்டுத் தர வேண்டும் என்றும் கோரியுள்ளார்.
மேலும், அபிநயா, முனுசாமியின் மனைவியின் தங்கை என்றும், அவரை இரண்டாவது திருமணம் செய்து கொள்ள முனுசாமி திட்டமிட்டிருந்ததாகவும், அது தெரிய வந்ததால் முனுசாமியின் மனைவி அவரை விட்டு பிரிந்து சென்றதாகவும், பின்னர்தான் இந்த விவரங்கள் தங்களுக்கு தெரியவந்ததாகவும் புகாரில் தெரிவித்துள்ளார். பணத்திற்காக தான் காதலித்த பெண்ணையே வேறொருவருக்கு திருமணம் செய்து வைத்து பின்னர் அழைத்துச் சென்றதாகக் கூறி, சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து கஜேந்திரன் கூறுகையில், "என்னை ஏமாற்றிய அபிநயா, முனுசாமி மற்றும் ஜோதி ஆகியோர் மீது மோசடி புகார் அளித்துள்ளேன். அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து, திருமணச் செலவாக செய்த ரூ.4 லட்சத்தை மீட்டுத் தர வேண்டும். அதே நேரத்தில், அபிநயா மனம் திருந்தி மீண்டும் வந்தால், அவரை மனைவியாக ஏற்றுக்கொள்ளவும் நான் தயாராக இருக்கிறேன்" என்று உருக்கமாக தெரிவித்தார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்