கலப்பு திருமணம்: காதலனின் தாயார் மீது, பெண் வீட்டார் கொடூர தாக்குதல்!

கலப்பு திருமணம்: காதலனின் தாயார் மீது, பெண் வீட்டார் கொடூர தாக்குதல்!
Published on
Updated on
1 min read

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில், கலப்பு திருமணம் செய்தவரின் தாயை, பெண்ணின் உறவினர்கள் கொடூரமாக தாக்கியுள்ளார்கள்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள கொளத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தனபால் மகன் சூர்யா. சூரியாவின் குடும்பத்தினர் அதே கிராமத்தில் முடி திருத்தும் வேலையை செய்து வருகின்றனர். சூர்யா தொழில் கல்வி (ITI) முடித்துவிட்டு சென்னையில் வேலை செய்து வந்ததாக கூறப்படுகிறது. 

மேலும் சூர்யாவும் அதே கிராமத்தைச் சேர்ந்த மாற்று சமூகத்தைச் சேர்ந்த  பெண்ணும் கடந்த மூன்று ஆண்டுகளாக  காதலித்து வந்துள்ளனர். கடந்த ஆறு மாதங்கள் முன்பு, இருவரும் திருமணமும் செய்துள்ளனர். இந்நிலையில், அப் பெண்ணின் உறவினர்கள் சூர்யாவின் வீட்டிற்கு சென்று கடந்த சில மாதங்களாகவே சண்டையிட்டு தகராறில் ஈடுபட்டு வந்துள்ளனர். 

இந்நிலையில், சூர்யாவின் தாய், வீட்டில் தனியாக இருக்கும் வேளையில், அங்கு வந்த அப்பெண்ணின்  பெற்றோர், உன் மகன் எங்கே என கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார்கள். அதற்கு சூர்யாவின் தாய், தன மகன் எங்கு சென்றுள்ளான் என்பது தெரியாது என கூறியுள்ளார். இதனைக்கேட்டு, ஆத்திரமடைந்த அவர்கள், சூர்யாவின் தாயை கொடூரமாக தாக்கி தெருவில் இழுத்துப்போட்டு, உன்னை கொலை செய்தால் உன் மகன் வருவான் எனக்கூறி, மிகவும் மோசமாக தாக்கியுள்ளார்கள். 

சூரியாவின் தாயார் கொடூரமான முறையில் தாக்கப்படும் காணொளி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அதில், அவரைத் தாக்குவதும் பெண்கள் தான். ஒரு பெண்ணென்றும் பாராமல், இறுகிய மனதுடன் அவரைத் தாக்குவது கொடுமையாக உள்ளதாகவும், தாக்கியவர்களை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.  மேலும் சூர்யாவின் தாய் சுமதி கொடுத்த புகாரின் பேரில் சங்கராபுரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணையில் மேற்கொண்டு வருகின்றனர். காதலித்து திருமணம் செய்து கொண்ட காதலன் மற்றும் காதலியும் திருமண வயதை எட்டியவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com