
தூத்துக்குடி தாளமுத்து நகரில் இருந்து வெள்ளப்பட்டி செல்லக்கூடிய காட்டுப்பகுதியில் வாலிபர் குத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் தப்பி ஓடிய 4 பேர் கைது. தங்கையை கிண்டல் செய்ததால் நண்பருடன் சேர்ந்து தீர்த்து கட்டியது விசாரணையில் தெரியவந்தது.
தூத்துக்குடி தாளமுத்து நகர் அருகே உள்ள துரைசிங் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் மிட்டாய் கடையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் சூர்யா (21) கடலுக்கு மீன் பிடிக்க சென்று வருகிறார். சூர்யா கஞ்சா போதைக்கு அடிமையாகி சுற்றி வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் சூர்யா தாளமுத்து நகர் பகுதியில் இருந்து வெள்ளப்பட்டி கிராமத்திற்கு செல்லக்கூடிய சாலை வழியாக நண்பர்கள் மூன்று பேருடன் மது குடிக்க வெள்ளப்பட்டி அந்தோணியார் கோயில் பின்புறம் உள்ள முட்புதர் நிறைந்த காட்டுப்பகுதிக்கு சென்றுள்ளார்.
நண்பர்களோடு மது அருந்தியுள்ளார், ஆனால் தகராறு ஏற்பட்டு நண்பர்கள் மூன்று பேர் சேர்ந்து சூர்யாவை கத்தியால் குத்தியதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சூர்யா பரிதாபமாக பலியானார்.
இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தாளமுத்து நகர் காவல்துறையினர் சூர்யாவின் உடலை கைப்பற்றி ஆம்புலன்ஸ் மூலம் பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சூர்யாவை கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய 3 பேர் கொண்ட கும்பலை காவல்துறையினர் தேடி வந்தனர்.
இந்த சூழலில்தான் சம்பவத்தில் தொடர்புடைய தூத்துக்குடி தாளமுத்து நகர் கணபதி நகரை சார்ந்த முருகன் மகன் உத்திரக் கண்ணன், மற்றும் அவரது நண்பர்கள் தூத்துக்குடி மேல அழகாபுரி கணேசபுரத்தைச் சேர்ந்த மாரிமுத்து மகன் மாரிமுத்து சூர்யா, தூத்துக்குடி சிலுவை பட்டி சமீர் வியாஸ் நகரைச் சார்ந்த குணசேகரன் மகன் இசக்கி ராஜா, சுனாமி காலனி சார்ந்த சேதுபதி மகன் மகேந்திரன் உள்ளிட்ட நான்கு பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
போலீசாரின் விசாரணையில், உத்திர கண்ணன் சகோதரியை சூர்யா கிண்டல் செய்ததால் ஆத்திரம் அடைந்த உத்திரக்கண்ணன் தனது நண்பருடன் சேர்ந்து சூர்யாவை மது குடிக்க வைத்து கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது.
தூத்துக்குடியில் தங்கையை கிண்டல் செய்த சூர்யா என்ற வாலிபர் காட்டுப்பகுதியில் நண்பர்களால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.