சென்னை திரு.வி.க.நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஏஜாஸ் அஹமத். இவரது மகள், கோபாலபுரம் பகுதியில் உள்ள சென்னை நடுநிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த மூன்று நாட்களாக அந்த சிறுமி மாதவிடாய் தொடர்பான உடல்நல பிரச்சனையால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் நேற்று வழக்கம் போல் பள்ளிக்கு சென்ற சிறுமி, நேற்று மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு வகுப்பறையில் தனது இருக்கையில் அமர்ந்திருந்துள்ளார். அப்போது மதியம் 12.45 மணி அளவில் வகுப்பாசிரியரான செண்பகவல்லி, சிறுமியின் அருகில் சென்று பேசியதாக கூறப்படுகிறது.
அப்போது சிறுமியிடமிருந்து துர்நாற்றம் வீசுவதாக கூறிய ஆசிரியர், வகுப்பறைக்குள் இருக்கக் கூடாது என்றும், வெளியே சென்று நிற்குமாறும் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. மேலும் வகுப்பறைக்கு வெளியே சென்ற சிறுமியிடம் தரையில் அமரவும் கூடாது என கூறப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் அதிர்ச்சி மற்றும் மனவேதனை அடைந்த சிறுமி, மதியம் முதல் பள்ளி முடியும் வரை வகுப்பறைக்கு வெளியே நின்றபடியே இருந்ததாக சொல்லப்படுகிறது. மாலை 4.10 மணி வரை சக மாணவர்கள் அனைவரும் வகுப்பறைக்குள் பாடம் கற்றுக்கொண்டிருந்த நிலையில், அந்த சிறுமி மட்டும் வெளியே நிற்க வைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனால் அதிக கால் வலி ஏற்பட்ட நிலையில் பள்ளி முடிந்த பிறகு தனது மகளை அழைத்துச் செல்ல வந்த தந்தை ஏஜாஸ் அஹமத்திடம், சிறுமி நடந்த சம்பவத்தை கூறியபடி கதறி அழுதிருக்கிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த தந்தை, உடனடியாக ஆசிரியர் செண்பகவல்லி இடம் சென்று இது குறித்து விளக்கம் கேட்க முயன்றுள்ளார். ஆனால் அவர் உரிய பதில் அளிக்காமல் அவரை உதாசினப்படுத்தி அங்கிருந்து சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஏஜாஸ் அஹமத், தனது மகள் வகுப்பு ஆசிரியரால் மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டதாகவும் குற்றம்சாட்டி, நேற்று மாலை திரு.வி.க.நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் அடிப்படையில் திரு.வி.க.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாணவியிடம் நடந்ததாக கூறப்படும் இந்த சம்பவம் தொடர்பாக பள்ளி நிர்வாகம், ஆசிரியர் மற்றும் சம்பந்தப்பட்டவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மாதவிடாய் காரணமாக பள்ளி மாணவி வகுப்பறைக்கு வெளியே பல மணி நேரம் நிற்க வைக்கப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு, பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.