

பேரக்குழந்தைகளை அன்போடும் பாசத்தோடும் வளர்த்து, அவர்களின் மகிழ்ச்சிக்காகவே வாழ்பவர்கள் தாத்தா, பாட்டிகள். வயதான காலத்தில் குடும்பத்தினரின் ஆதரவும் அரவணைப்பும் அவர்களுக்கு மிகவும் அவசியம். ஆனால், மாதந்தோறும் கிடைக்கும் சிறிய தொகைக்காக தனது 78 வயது பாட்டியையே பேரன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பணத்துக்காக உறவுகளின் மதிப்பையும் மனிதநேயத்தையும் மறந்து நடந்த இந்தச் சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்தக் கொடூரச் சம்பவம் கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் உள்ள ஹுக்கேரி தாலுகாவுக்கு உட்பட்ட அரளிகட்டி கிராமத்தில் நடந்துள்ளது. ஹம்மவ்வா சனாடி என்ற 78 வயது மூதாட்டி, கர்நாடக அரசின் குடும்ப நல உதவித் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் கிடைக்கும் ரூ.2,000 பணத்தைப் பெற்று வந்துள்ளார். இந்தப் பணத்தைப் பெறுவதற்காக அவரைத் தொடர்ந்து தொந்தரவு செய்து வந்ததாக அவரது பேரன் பீமப்பா சனாடி மீது போலீசார் குற்றம்சாட்டியுள்ளனர்.
கர்நாடக அரசின் 'கிருஹ லட்சுமி' திட்டத்தின் கீழ் குடும்பத் தலைவிகளாக இருக்கும் தகுதியான பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2,000 நிதியுதவி வழங்கப்படுகிறது. குடும்பச் செலவுகளுக்கு உதவுவதோடு, பெண்கள் பொருளாதார ரீதியாகத் தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதும் இந்தத் திட்டத்தின் நோக்கமாகும். இந்தத் திட்டத்தின் மூலம் ஹம்மவ்வாவுக்கும் பணம் கிடைத்து வந்துள்ளது. ஆனால், அவருக்குக் கிடைக்கும் இந்தத் தொகையே அவரது உயிருக்கு ஆபத்தாக மாறும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.
கடந்த நவம்பர் 10ஆம் தேதி ஹம்மவ்வா திடீரென காணாமல் போனார். இதனால் குடும்பத்தினர் அவரைத் தேடத் தொடங்கினர். இதற்கிடையே, நவம்பர் 15ஆம் தேதி ஹிட்கல் அணையின் நீர்த்தேக்கப் பகுதியில் ஒரு மூதாட்டியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அந்த உடல் ஒரு சாக்கு மூட்டைக்குள் அடைக்கப்பட்டிருந்தது. மேலும், மூட்டை தண்ணீரில் மிதக்காமல் இருக்க அதன் உள்ளே பெரிய கல்லும் வைக்கப்பட்டிருந்தது. இந்தக் கொடூரமான முறையில் உடல் மறைக்கப்பட்டிருந்தது போலீசாருக்கு பல சந்தேகங்களை ஏற்படுத்தியது.
விசாரணையில், அது காணாமல் போன ஹம்மவ்வாவின் உடல் என்பது தெரியவந்தது. இதையடுத்து, யமகனமரடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தீவிரப்படுத்தினர். குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அவருடன் தொடர்பில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவரது பேரன் பீமப்பா மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், மூதாட்டியை தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றது தொடர்பான தகவல்கள் கிடைத்தன.
வெள்ளி நகைகள் வாங்கித் தருவதாகக் கூறி ஹம்மவ்வாவை தனது மோட்டார் சைக்கிளில் பீமப்பா அழைத்துச் சென்றதாக போலீசார் தெரிவித்தனர். முதலில் அவரை குந்தரகி கூட்டுறவு சங்கத்துக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு மூதாட்டியிடம் பணம் எடுக்கச் செய்ததாகக் கூறப்படுகிறது. அதன்பிறகு கவிசித்தேஸ்வரா மலைப்பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அவரை கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
கொலைக்குப் பிறகு மூதாட்டியிடம் இருந்த ரூ.2,300 ரொக்கப் பணத்தையும், அவர் அணிந்திருந்த தங்கச் சங்கிலியையும் பீமப்பா எடுத்துக்கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். பின்னர் உடலை ஒரு சாக்கு மூட்டைக்குள் வைத்து, அதன் உள்ளே கல்லையும் சேர்த்து அடைத்துள்ளார். தொடர்ந்து தனது இருசக்கர வாகனத்தில் சுமார் 15 கிலோமீட்டர் தூரம் எடுத்துச் சென்று ஹிட்கல் அணையின் நீர்த்தேக்கப் பகுதியில் வீசியதாகக் கூறப்படுகிறது.
கொலை செய்துவிட்டு தப்பிக்க வேண்டும் என்பதற்காக பீமப்பா மற்றொரு நாடகத்தையும் நடத்தியதாக போலீசார் கூறுகின்றனர். தனது பாட்டியைக் காணவில்லை என்று தந்தை ராமப்பா சனாடியிடம் தெரிவித்த அவர், தானும் அவரைத் தேடுவது போல நடந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. இரண்டு நாட்களுக்குப் பிறகு ராமப்பா தனது சகோதரியிடம் தாயைக் காணவில்லை என்ற தகவலைத் தெரிவித்துள்ளார். பின்னர் அணையின் நீர்த்தேக்கப் பகுதியில் உடல் கிடப்பதாக பீமப்பா தனது தந்தையிடம் கூறியுள்ளார்.
இதையடுத்து ராமப்பாவும் அவரது மகனும் அந்தப் பகுதிக்குச் சென்று உடலை மீட்டுள்ளனர். பின்னர் இந்த விவகாரம் போலீசாரின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது. விசாரணையின்போது பீமப்பா தனது பாட்டிக்குக் கிடைத்து வந்த கிருஹ லட்சுமி திட்டத்தின் பணத்துக்காகவே அவரைக் கொலை செய்ததாக ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவரைக் கைது செய்துள்ளனர். இந்தக் குற்றம் குறித்து பீமப்பா தனது தந்தையிடம் முன்கூட்டியே தெரிவித்தாரா அல்லது குற்றத்துக்குப் பிறகு தகவல் அளித்தாரா என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர். கொலைக்கு முன்பும், கொலைக்குப் பிறகும் அவர் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்தும் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
பெண்களின் பொருளாதார முன்னேற்றத்துக்காக வழங்கப்படும் மாதாந்திர நிதியுதவியே ஒரு மூதாட்டியின் உயிரைப் பறித்ததாகக் கூறப்படும் இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வயதான காலத்தில் பாதுகாப்பும் அன்பும் கிடைக்க வேண்டிய உறவுகளிடமே இதுபோன்ற கொடூரங்கள் அரங்கேறுவது சமூகத்தில் கவலையை ஏற்படுத்துகிறது. வெறும் சில ஆயிரம் ரூபாய் பணத்துக்காகப் பாட்டியைக் கொலை செய்ததாக பேரன் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டு, மனிதநேயம் எந்த அளவுக்குச் சிதைந்து வருகிறது என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.