PUBG விளையாடும் பழக்கம்தான் காரணமா? 6 வயது சிறுமி மீது 8 வயது சிறுவன் கொடூரத் தாக்குதல்!

அவளது தந்தை மேல்மாடியில் இருப்பதாகக் கூறிய சிறுவன், அழைத்துச் செல்வதாக கூறி சிறுமியைத் தனியாக இருந்த வகுப்பறைக்கு
haryana
Published on: 
Updated on: 
1 min read

ஹரியானா மாநிலம் பஞ்ச்குலாவில் உள்ள பள்ளி ஒன்றில், 6 வயது சிறுமியை 8 வயது சிறுவன் கொடூரமாகத் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தில், வன்முறை நிறைந்த ஆன்லைன் கேம்களை விளையாடும் பழக்கம் அந்தச் சிறுவனுக்கு இருந்ததாக, பாதிக்கப்பட்ட சிறுமியின் மாமா தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, PUBG உள்ளிட்ட ஆக்ரோஷமான விளையாட்டுகளை அந்தச் சிறுவன் விளையாடி வந்ததாகவும், அவனது தந்தையும் ஒப்புக்கொண்டதாகவும் கூறியுள்ளார். இந்தத் தாக்குதல் எப்படி நடந்தது என்பது குறித்தும் அவர் விளக்கியுள்ளார்.

சம்பவத்தன்று, அந்தச் சிறுமியைப் பார்த்து சிறுவன் 'பைத்தியம்' என்று கேலி செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சிறுமி, அவனிடம் கேள்வி எழுப்பியதுடன், இதுகுறித்து புகார் அளிப்பதாகவும் கூறியுள்ளார். அப்போது, அவளது தந்தை மேல்மாடியில் இருப்பதாகக் கூறிய சிறுவன், அழைத்துச் செல்வதாக கூறி சிறுமியைத் தனியாக இருந்த வகுப்பறைக்கு அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.

அங்கு, யாரும் இல்லாத நேரத்தில் சிறுமியைச் சரமாரியாகத் தாக்கியுள்ளான். அவளைக் கைகளாலும் கால்களாலும் தாக்கியதுடன், தலையில் மழுங்கிய பொருட்களைக் கொண்டும் அடித்ததாகப் புகார் எழுந்துள்ளது.

இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த சிறுமி, சண்டிகரில் உள்ள PGIMER மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். சுமார் 40 மணி நேரத்திற்குப் பிறகு அவர் சுயநினைவுக்குத் திரும்பியதாகத் தெரிவிக்கப்பட்டது. தற்போது சிறுமியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், கடந்த இரண்டு, மூன்று நாட்களாக மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து சிறந்த சிகிச்சை அளித்து வருவதாகவும் அவரது மாமா தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, பள்ளியில் ஆசிரியர்களின் அலட்சியம் காரணமாக இரண்டு JBT ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், இந்தச் சம்பவத்தை ஹரியானா மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. இதுதொடர்பாக விரிவான அறிக்கை அளிக்குமாறு மாவட்டக் கல்வி அதிகாரிக்கும் உத்தரவிட்டுள்ளது.

சம்பவம் குறித்து விசாரிக்க ஹரியானா அரசு ஐந்து பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் பாதுகாப்புத் தணிக்கை நடத்தவும் முடிவு செய்துள்ளது. பள்ளி வளாகத்திலேயே ஒரு பிஞ்சுக் குழந்தைக்கு நடந்த இந்தக் கொடூரத் தாக்குதல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஆன்லைன் கேம்களின் தாக்கம் குறித்த விவாதமும் எழுந்துள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்