“கீழே குதித்து தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன்” - மகளிர் விடுதி வாசலில் கிடந்த சடலம்.. காதலனுடன் ஏற்பட்ட தகராறில் ஐடி ஊழியர் விபரீதம்!

ஜீவப்பிரியா கீழே குதிப்பதாக கூறிவிட்டு போனை துண்டித்து விட்டார்...
it suicide girl
it suicide girl
Published on
Updated on
2 min read

தேனி மாவட்டம் பெரியகுளத்தைச் சேர்ந்த ராஜாவின் மகள் 22 வயதுடைய ஜீவப்பிரியா. சென்னை சோழிங்கநல்லூரில் செயல்பட்டு வரும் ஹெச்.சி.எல். (HCL) மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்த இவர், சோழிங்கநல்லூர் லால் பகதூர் சாஸ்திரி தெருவில் உள்ள கிருஷ்ணா பெண்கள் விடுதியில் தங்கி வேலை செய்து வந்திருக்கிறார். இந்த நிலையில், நேற்று முன்தினம் (ஜூலை 03) இரவு வழக்கம் போல் பணியை முடித்துவிட்டு விடுதிக்கு திரும்பிய ஜீவப்பிரியா, இரவு சுமார் 11.15 மணியளவில் தனது ஆண் நண்பரான சந்தோஷ் என்பவருடன் செல்போனில் பேசிக்கொண்டே விடுதியின் மொட்டை மாடிக்கு சென்றுள்ளார்.

அப்போது இருவருக்கும் இடையே தனிப்பட்ட பிரச்சினை தொடர்பாக கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. வாக்குவாதம் நீடித்த நிலையில், நள்ளிரவு சுமார் 12.30 மணியளவில், "நான் கீழே குதித்து தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன்" என்று ஜீவப்பிரியா கூறிவிட்டு திடீரென செல்போன் அழைப்பை துண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த சந்தோஷ், ஜீவப்பிரியா தங்கியிருந்த விடுதியின் அருகே உள்ள மற்றொரு பெண்கள் விடுதியில் வசித்து வந்த அவரது தோழி சஞ்சுஸ்ரீயை உடனடியாக தொடர்புகொண்டு, "எங்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டது. ஜீவப்பிரியா கீழே குதிப்பதாக கூறிவிட்டு போனை துண்டித்து விட்டார்" என பதற்றத்துடன் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து அதிர்ச்சியடைந்த சஞ்சுஸ்ரீ உடனடியாக ஜீவப்பிரியா தங்கி இருந்த விடுதிக்கு விரைந்து சென்றுள்ளார். அங்கு சென்று பார்த்தபோது, விடுதியின் மொட்டை மாடியில் இருந்து கீழே விழுந்து ரத்த வெள்ளத்தில் ஜீவப்பிரியா உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து, உடனடியாக அந்த வழியாக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த செம்மஞ்சேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், ஜீவப்பிரியாவை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்ப முயன்ற நிலையில், அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது.

பின்னர் அவரது உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக செம்மஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காதலருடன் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக ஜீவப்பிரியா இந்த முடிவை எடுத்தாரா? அல்லது அவரது மரணத்திற்கு வேறு ஏதேனும் பின்னணி காரணங்கள் உள்ளனவா? என்பது குறித்து செல்போன் அழைப்பு விவரங்கள், நண்பர்கள் மற்றும் விடுதி நிர்வாகத்தினரிடம் விசாரணை நடத்தி பல்வேறு கோணங்களில் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்த இளம் பெண், பெண்கள் விடுதி மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்த இந்த சம்பவம், சோழிங்கநல்லூர் பகுதியில் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் - 104

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com