

பள்ளியில் உடை மாற்றும் அறையில் மாணவிகளை ரகசியமாக கேமராவில் பதிவு செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட மேரிலாந்து உயர்நிலைப் பள்ளி ஊழியர். மேலும், பாதிக்கப்பட்ட எட்டுப் பேர் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, கூடுதல் குற்றவியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மாண்ட்கோமரி கவுன்டியில் உள்ள வால்டர் ஜான்சன் உயர்நிலைப் பள்ளியின் ஊழியரான ஜேம்ஸ் முல்ஹெர்ன் III, பள்ளியில் படித்த சிறார்களை துன்புறுத்தியதாக 12 குற்றசாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளது. மேலும், புதிதாக மீட்கப்பட்ட காணொளிகளில் மொத்தம் 12 மாணவிகள் பல்வேறு நிலைகளில் ஆடையின்றி இருந்ததாக புலனாய்வாளர்கள் தெரிவித்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மாண்ட்கோமரி கவுண்டி காவல்துறையின் கூற்றுப்படி, ஏப்ரல் 7 அன்று வால்டர் ஜான்சன் உயர்நிலைப் பள்ளியின் நாடக அரங்கில் இருந்த ஒரு அறையில் இரண்டு மாணவிகள் ஒரு வீடியோ கேமராவைக் கண்டுபிடித்ததை அடுத்து இந்த விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. மாணவிகளில் ஒருவர் அந்த மெமரி கார்டை ஆய்வு செய்தபோது, மாணவிகளின் உடை மாற்றும் அறைக்குள் வீடியோக்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதைக் கண்டறிந்துள்ளனர். இதனையடுத்து, பள்ளி நிர்வாகிகளுக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். வயது வந்த ஆண் ஒருவர் அந்த அறையை விட்டு வெளியேறுவதற்கு முன்பு, கேமராவை அறைக்குள் வைப்பதை அந்தக் காணொளி காட்டியதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
பள்ளியின் முதல்வர் அந்த நபரை, பள்ளியில் ஊடகச் சேவை தொழில்நுட்ப வல்லுநராகப் பணிபுரியும் முல்ஹெர்ன் என அடையாளம் கண்டுள்ளார். காவல்துறையின் தகவல்படி, துப்பறிவாளர்கள் சாட்சிய பொருட்களை மீட்டெடுத்ததோடு, பல மின்னணு சாதனங்களையும் கைப்பற்றியுள்ளனர். விசாரணையின் போது மீட்கப்பட்ட ஆதாரங்கள், கூடுதலாக எட்டு பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் 2015-ம் ஆண்டு வரையிலான வீடியோக்களை அடையாளம் காண துப்பறிவாளர்களுக்கு உதவியதாகவும், இதன் மூலம் ஏப்ரல் மாதம் முல்ஹெர்ன் மீது முதன்முதலில் குற்றம் சாட்டப்பட்டபோது அடையாளம் காணப்பட்ட நான்கு பாதிக்கப்பட்டவர்களை விட இந்த வழக்கில் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கூடுதல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக முல்ஹெர்ன் கடந்த புதன்கிழமை நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.
இதனைத்தொடர்ந்து, வால்டர் ஜான்சன் உயர்நிலைப் பள்ளிக்குச் செல்லக்கூடாது, சிறார்களுடன் எந்தத் தொடர்பும் கொள்ளக்கூடாது, மேலும் அவரது 4 வயது மகனை மேற்பார்வையின் கீழ் மட்டுமே சந்திக்க வேண்டும் ஆகிய நிபந்தனைகளுடன், ஒரு லட்சம் டாலர் தனிநபர் பிணைப்பணத்தில் அவரை விடுவிக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும், மேரிலாந்து சட்டத்தின்படி, சிறார் மீதான ஒவ்வொரு குற்றத்திற்கும் அதிகபட்சமாக 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும். 12 குற்றச்சாட்டுகளிலும் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், முல்ஹெர்ன் 300 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையை எதிர்கொள்ள நேரிடும் என்றும் கூறப்பட்டுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.