

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள உயர் அதிகாரி ஒருவரின் மனைவி, எந்த ஒரு வேலையையும் செய்யாமலேயே இரண்டு தனியார் நிறுவனங்களிடமிருந்து முப்பத்தேழு லட்சத்து ஐம்பத்து நாலாயிரம் (37.54 லட்சம்) ரூபாய்க்கும் அதிகமாகச் சம்பளமாகப் பெற்றுக் குவித்தது, தற்போது லஞ்ச ஒழிப்புத் துறையின் (Anti-Corruption Bureau - ACB) விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தத் தகவல்களை அடுத்து, இந்த மோசடியில் தொடர்புடைய அதிகாரி மற்றும் அவரது மனைவி உட்படப் பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, தீவிர விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளவர், மாநிலத் தகவல் தொழில்நுட்பத் துறைக்குக் கீழ் இயங்கும் 'ராஜ்காம்ப் தகவல் சேவைகள் லிமிடெட்' என்ற நிறுவனத்தின் இணை இயக்குநராக இருந்த பிரத்யுமன் தீக்ஷித் ஆவார். இவர் அரசு தகவல் தொழில்நுட்பத் திட்டங்களை நிறைவேற்ற ஒப்பந்தம் செய்யப்பட்ட இரண்டு தனியார் நிறுவனங்களுக்குச் சாதகமாகச் செயல்பட்டு, தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
அதிகாரி பிரத்யுமன் தீக்ஷித், அந்த இரண்டு தனியார் நிறுவனங்களுக்கும் அரசு ஒப்பந்தங்கள் மற்றும் திட்ட ஒப்புதல்களை வழங்குவதற்கு உதவியுள்ளார். அதற்குப் பதிலாக, அந்த நிறுவனங்கள் இவரது மனைவி பூனம் தீக்ஷித் என்பவரைத் தங்களது ஊழியராக ஆவணங்களில் காட்டியுள்ளன. உண்மையில் பூனம் தீக்ஷித் அந்த நிறுவனங்களில் ஒரு நாள் கூட வேலை செய்யவில்லை. இருப்பினும், கடந்த 2019 மற்றும் 2020ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், இரண்டு நிறுவனங்களும் அவரது தனிப்பட்ட வங்கிக் கணக்குகளில் மாதந்தோறும் தொடர்ந்து 'சம்பளம்' என்ற பெயரில் பணத்தைப் போட்டு வந்துள்ளன.
லஞ்ச ஒழிப்புத் துறையின் முதல் தகவல் அறிக்கையின்படி (FIR), பூனம் தீக்ஷித் ஒரே நேரத்தில் இரண்டு நிறுவனங்களில் வேலை செய்வதாக ஆவணங்கள் காட்டுகின்றன. வேலை செய்யாமலேயே அவருக்கு இந்த இரண்டு நிறுவனங்களில் இருந்தும் முப்பது லட்ச ரூபாய்க்கும் அதிகமான பணம் வரவு வைக்கப்பட்டுள்ளது. அரசு ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக, அந்தத் தனியார் நிறுவனங்கள் அதிகாரி பிரத்யுமன் தீக்ஷித்துக்குக் கொடுத்த லஞ்சப் பணத்தைத்தான், அவரது மனைவியின் பெயரில் 'சம்பளம்' என்ற போர்வையில் செலுத்தப்பட்டுள்ளது என்று லஞ்ச ஒழிப்புத் துறையினர் சந்தேகம் கொண்டுள்ளனர்.
இந்த மோசடியில் பிரத்யுமன் தீக்ஷித், அவரது மனைவி பூனம் தீக்ஷித், மேலும் ஒரு ஊழியரான ராகேஷ் குமார் கமலேஷ் மற்றும் சிலர் மீது ஊழல் தடுப்புச் சட்டம் மற்றும் இந்தியத் தண்டனைச் சட்டத்தின் கீழ் கிரிமினல் சதி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் நடைபெற்ற காலகட்டத்தில் பிரத்யுமன் தீக்ஷித், தகவல் மையத்தின் இணை இயக்குநராகப் பணியாற்றியுள்ளார். தனது பதவியைத் தவறாகப் பயன்படுத்தி, அந்த நிறுவனங்களுக்குச் சலுகை அளிக்கும் விதமாகவே, மனைவிக்கு வேலை வாங்கித் தந்துள்ளார் என்பதுதான் முதற்கட்டக் குற்றச்சாட்டு. மேலும், லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள், மனைவி பூனம் தீக்ஷித் நிறுவனத்தில் வேலை பார்த்ததற்கான வருகைப் பதிவேடுகள் மற்றும் அவரது பணிக்கான ஒப்புதல் ஆவணங்களை அதிகாரி பிரத்யுமன் தீக்ஷித் சரிபார்த்தாரா என்றும் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.