"வேறொரு ஆணுடன் நெருக்கம்.. 2 முறை கருக்கலைப்பு" - ஹோட்டல் அறையில் காதலியை சரமாரியாக குத்திய காதல்! அதிரவைத்த கொலைக்கான காரணம்

ஹோட்டல் அறையில் சௌ கலைத்த இரண்டு கருக்களுக்கும் லோ தந்தை அல்ல என்று அவரிடம் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, அன்று இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
Hong Kong murder case
Hong Kong murder case
Published on: 
Updated on: 
2 min read

தனது முன்னாள் காதலியைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட ஹாங்காங்கை சேர்ந்த ஒரு நபர் ஒருவருக்கு, கடந்த நவம்பர் 19 அன்று ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. பல ஆண்களுடன் தொடர்பில் இருந்ததாகவும் கருக்கலைப்பு செய்ததாவும் உயிரிழந்த அந்த பெண் மீது குற்றம்சாட்டி, இதையே காரணமாக கூறியதால் பரபரப்பு.

32 வயதான அலெக்ஸ் லோ சுன்-மிங், யோகா பயிற்றுவிப்பாளர். இவர் அக்வா சௌவைக் கொலை செய்த குற்றச்சாட்டை மறுத்து, இந்த விவகாரம் குறித்து விசாரணை கோரியிருந்தார். இது ஒரு 'திட்டமிட்ட தாக்குதல்' என்று அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்ட நிலையில், சௌ வேறொரு ஆணுடன் தனிமையில் இருந்ததாகவும், அதன் பின்னர் அவர் கருவை கலைத்துவிட்டதை அறிந்த பிறகுதான், தனது கட்டுப்பாட்டை இழந்துவிட்டதாக லோ தெரிவித்துள்ளார்.

23 வயதான சௌ, கடந்த ஜூன் 30 அன்று மேற்கு கவ்லூனில் உள்ள ரிட்ஸ்-கார்ல்டன் ஹோட்டலில் 40க்கும் மேற்பட்ட கத்தியால் குத்தப்பட்ட காயங்களுடன் இறந்து கிடந்துள்ளார். மேலும் அவர் குளியல் தொட்டியில் குப்புறப் படுத்த நிலையில், ஒரு துண்டால் மூடப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. லோவும் சௌவும் 2021 பிப்ரவரியில் காதலர்களாகி, பின்னர் 2022 ஜனவரியில் பிரிந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் அவர்கள் தொடர்பில் இருந்து வந்துள்ளனர்.

தான் சௌவை மிகவும் நேசித்ததாகவும், அவரை உயர்தர உணவகங்களுக்கு அழைத்துச் சென்றதாகவும், ஆடம்பரப் பொருட்களை வாங்கித் தந்ததாகவும், அதனால் தனக்குப் பெரும் கடன் ஏற்பட்டதாகவும் லோ விசாரணையின்போது தெரிவித்துள்ளார். அவர் வங்கியில் இருந்து 200,000 ஹாங்காங் டாலருக்கும் (₹23.65 லட்சம்) அதிகமான கடன் வாங்கி, 120,000 ஹாங்காங் டாலர் (₹14.19 லட்சம்) மதிப்புள்ள மோதிரம் ஒன்றை வாங்கி, யோகா பயிற்சிக் கட்டணத்தைச் செலுத்தி, அவருக்கு 500,000 ஹாங்காங் டாலருக்கும் (₹59.11 லட்சம்) அதிகமான தொகையை பணமாக கொடுத்ததாக தெரிவித்துள்ளார்.

அப்போது லோ மாத வருமானம் சுமார் HK$30,000 (₹3.54 லட்சம்) மட்டுமே இருந்தபோதிலும், சௌ வேலையில்லாமல் லோவிடமிருந்து பணம் கேட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். மேலும், சௌ தனக்கு நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டு மற்ற ஆண்களுடன் பேசி வந்ததாக லோ குற்றம் சாட்டியுள்ளார். பின்னர், நவம்பர் 2 அன்று அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள், இந்தக் கொலை திட்டமிட்டுக் செய்யப்பட்டது என்று வாதிட்டு விசாரணையைத் தொடங்கினர் .

சௌ இறப்பதற்கு முந்தைய நாள் லோ அந்த ஹோட்டல் அறைக்குச் சென்றதாகவும், அவர் இறந்த நாளன்று ஒரு கத்தியை வாங்கி, பரிசுகள் தருவதாக சௌவிற்கு வாக்குறுதியளித்து அவரை அறைக்கு அழைத்து வந்ததாகவும், அதன் பின்னர் அவரது முகம், கழுத்து, உடல் மற்றும் கை கால்களில் 40-க்கும் மேற்பட்ட கத்திக் காயங்கள் ஏற்பட்டதாகவும் அவர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். அரசுத் தரப்பால் சமர்ப்பிக்கப்பட்ட தடயவியல் அறிக்கையில், சௌவின் மரணத்திற்குக் காரணம் கடுமையான இரத்த இழப்பு எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், சௌ பின்னாலிருந்து தாக்கப்பட்டதாகவும், நீரில் மூழ்கியதற்கான எந்த அறிகுறிகளும் காணப்படவில்லை என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், லோ தனது தரப்பில் இருந்து, தான் வாங்கிய 34 சென்டிமீட்டர் கத்தியானது, ஹோட்டல் அறையில் தன்னைத்தானே மாய்த்துக் கொள்வதற்காகவே வாங்கப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.

ஹோட்டல் அறையில் சௌ கலைத்த இரண்டு கருக்களுக்கும் லோ தந்தை அல்ல என்று அவரிடம் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, அன்று இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரத்தில் லோ பொறுமையிழந்துள்ளார். அதன்பிறகு தான் கட்டுப்பாட்டை இழந்து விட்டதாகவும், சௌவை கத்தியால் குத்தியது மட்டுமே நினைவிருப்பதாகவும் லோ தெரிவித்துள்ளார். "எனது பொறுப்பை நான் முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன். சௌ மீதான என் காதலை நீங்கள் புறக்கணிக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன், என்று லோ எழுதியதாக செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.

இருப்பினும், திட்டமிட்ட அந்தக் கொலையானது கோபம், வெறுப்பு மற்றும் பொறாமையால் ஏற்பட்டது என்றும், அதற்கும் காதலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் நீதிபதி தரப்பில் இருந்து தெரிவித்துள்ளார். லோ தனது தண்டனைக் குறைப்புக் கடிதத்தில், தான் செய்த செயலுக்காக சௌவிடமும் அவரது குடும்பத்தினரிடமும் மன்னிப்புக் கிடப்பதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து, லோவிற்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.