Youtube கண்டு பிரசவம் பார்த்த கணவர்...மனைவி உயிரிழப்பு!!

Youtube கண்டு பிரசவம் பார்த்த கணவர்...மனைவி உயிரிழப்பு!!
Published on
Updated on
1 min read

யூ-டியூப் பார்த்து இயற்கையான முறையில் பிரசவம் பார்த்தபோது கர்ப்பிணிப் பெண் பரிதாபமாக உயிரிழந்த சோகம் அரங்கேறியுள்ளது. 

கிருஷ்ணகிரி மாவட்டம் புளியம்பட்டி பகுதியைச் சேர்ந்த லோகநாயகி என்ற பெண்ணுக்கும் தர்மபுரி மாவட்டம் அனுமந்தபுரம் கிராமத்தைச் சேர்ந்த மாதேஷ் என்பவருக்கும் கடந்த 2021-ம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. மாதேஷூக்கு இயற்கையை பாதுகாப்பதிலும், இயற்கை முறையில் விவசாயம் பார்ப்பதிலும் ஆர்வம் அதிகம் இருந்துள்ளது. இதையடுத்து தன் மனைவி லோகநாயகிக்கு ஆங்கில மருத்துவ சிகிச்சையை விடுத்து பேணிக் காத்து வந்துள்ளார்.

பொதுவாக பெண்கள் கர்ப்பம் தரித்தவுடன் கர்ப்பப்பையை வலுப்படுத்துவதற்காக மருத்துவமனையில் ஊசி செலுத்துவது வழக்கம்.  இந்த நிலையில் அங்கிருந்த கிராம செவிலியர் தாமாக முன்வந்து அரசு பதிவேட்டில் லோகநாயகி கர்ப்பமாக இருப்பதை பதிவு செய்து விட்டு வற்புறுத்தி 2 தடுப்பூசிகளை செலுத்தினர். 

இதனால் ஆத்திரமான மாதேஷ், மருத்துவர்களின் தொல்லையில் இருந்து தப்பிக்க வேண்டும் என முடிவெடுத்து மனைவியை புளியம்பட்டிக்கு அழைத்துச் சென்று யாருக்கும் தெரியாமல் இயற்கை முறையில் சிகிச்சை அளித்து வந்ததாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த லோகநாயகிக்கு 23-ம் தேதியன்று அதிகாலை சுமார் 4 மணியளவில் பிரசவ வலி வந்தது. உடனே மாதேஷ், தன் மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் வீட்டிலேயே இயற்கை முறையில் பிரசவம் பார்த்துள்ளார். 

பிரசவம் பார்த்துக் கொண்டிருந்த நேரம் திடீரென சந்தேகம் எழுந்ததைத் தொடர்ந்து, யூ-டியூபில் பிரசவம் பார்ப்பது எப்படி என தேடிப் பார்த்துள்ளார் மாதேஷ். இதற்கிடையே வலியால் துடித்த லோகநாயகிக்கு நீண்ட போராட்டத்துக்கு பிறகு அழகான ஆண் குழந்தை பிறந்தது. 

தாய் லோகநாயகியின் வயிற்றில் இருந்து நச்சுக்கொடி வெளியே வராமல் இருந்ததால் செய்வதறியாது திகைத்தார் மாதேஷ். நச்சுக்கொடியை எப்படி வெளியே எடுப்பது என தெரியாதவர் மீண்டும் யூ-டியூபில் தேடினார். 

ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக சுயநினைவை இழந்த லோகநாயகி வீட்டிலேயே பேச்சு மூச்சின்றி கிடந்தார். இதைத் தொடர்ந்து லோகநாயகியை தூக்கிக் கொண்டு குள்ளனூர் தனியார் மருத்துவமனையில் சேர்த்தபோது, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே உயிரிழந்ததாக கூறினர். 

இதுமட்டுமல்லாமல் உயிரிழந்த மனைவியின் உடலை யாருக்கும் தெரியாமல் அடக்கம் செய்ய முயன்றார் மாதேஷ். இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட சுகாதார ஆய்வாளர் சசிகுமார் உயிரிழந்த லோகநாயகியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளார்.

மனைவியின் பிரசவத்தை அலட்சியமாக  யூ-டியூப் மூலம் பிரசவம் பார்த்த கணவனின் இந்த செயல் போச்சம்பள்ளி கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்ட சுகாதாரத்துறை மற்றும் பொது மக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com