இதையெல்லாம் தாண்டி, பெற்ற மகன்களுக்கு சிறிய அளவிலான கார் உள்ளிட்ட விளையாட்டுப் பொருட்களையும் அபேஸ் செய்த அங்கிள் எதுவும் தெரியாதது போல முரட்டு பார்வையுடன் சமாளித்தார்.
வழக்கமாக வந்து செல்லும் வாடிக்கையாளர் என்பதால் கடையின் உரிமையாளர் முதலில் எதையுமே கவனிக்காதிருந்தார். ஆனால் கடையின் சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோதுதான் நடந்தது தெரியவந்தது. சென்னை தாம்பரம் அருகே பெருங்களத்தூர் சத்தியமூர்த்தி சாலையில் பேன்ஸி ஸ்டோர் ஒன்று இயங்கி வருகிறது. துளசிராம் என்பவருக்கு சொந்தமான இந்த கடையில், பரிசுப் பொருட்கள், பெண்களுக்கான அழகு சாதனப் பொருட்கள், குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருட்கள் போன்றவை விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 29-ம் தேதியன்று துளசிராமின் கடைக்கு அதே பகுதியைச் சேர்ந்த ஒருவர், மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் பர்ச்சேஸ் செய்வதற்காக சென்றிருந்தார்.
கடை உரிமையாளரிடம் மனைவியை பேச்சு கொடுக்க வைத்தவர், குழந்தைகளை ஒரு பக்கம் விளையாடுவதற்கு விட்டு விட்டு சித்து வேலையில் இறங்கினார்.
கடையில் கண்காணிப்பு கேமரா இருப்பதை அறிந்தபோதும், சிறுசிறு பொருட்களை படக் படக் என எடுத்து பைக்குள் போட்டார். மனைவி எப்போதும் கண்ணாடி முன் நின்று தன்னை அழகுபடுத்திக் கொள்பவர் என்பதால்தானோ என்னவோ, அவருக்காக லிப்ஸ்டிக், நெயில் பாலிஷ், பெர்ஃப்யூம், ஐ லைனர், லிப் பாம் போன்றவற்றை திருடினார்.