
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே பெரிய நெல்லிக் கொல்லை ஆசாரி தெருவை சேர்ந்த 55 வயதான அண்ணாதுரை. இவருக்கு அமுதா என்ற மனைவியும் ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். கடந்த சில வருடங்களுக்கு முன்பு மகளுக்கு திருமணம் செய்து வைத்த நிலையில் அண்ணாதுரை மகன் மற்றும் மனைவியுடன் குடும்பமாக வாழ்ந்து வந்துள்ளார்.
அண்ணாதுரை மற்றும் அமுதாவுக்கு இடையே உறவினர்களை மையமாக வைத்து அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இது முற்றி கணவனும் மனைவியும் தனி தனியே பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் மகனுக்கு திருமணம் நடத்த முடிவெடுத்த அமுதா கணவருடன் சேர்ந்து திருமணத்திற்கான வேலைகளை மேற்கொண்டு வந்துள்ளார்.
கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு மகனுக்கு திருமணம் முடிந்த நிலையில் நேற்று பெண்ணின் வீட்டில் கறி விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விருந்து முடிந்த நிலையில் தனது மாமியாரை வீட்டில் விட அமுதா ஆட்டோவில் வீட்டுக்கு வந்துள்ளார். வீட்டில் காத்திருந்த அண்ணாதுரை அமுதாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது “பிரிந்து வாழ்ந்த கணவனுக்கு மரியாதை குடுக்க மாட்டியா கறி விருந்துல கண்டுக்காம போற” என கேட்டு தகராறு செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அமுதாவும் பதிலுக்கு பேச வீட்டில் தனது தச்சு வேலைக்கு வைத்திருந்த உளியை பயன்படுத்தி அண்ணாதுரை அமுதாவை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் அமுதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
அமுதாவின் உடலை எடுத்து வீட்டின் பின்புறத்தில் வைக்கோல் வைத்திருந்த பகுதியில் போட்டு தப்பி சென்றுள்ளார் அண்ணாதுரை. அமுதாவின் உடலை பார்த்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அமுதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தப்பி சென்ற அண்ணாதுரையை போலீசார் தேடி வந்துள்ளனர்.
இந்நிலையில் அதே பகுதியில் சுற்றித்திரிந்த அண்ணாதுரையை கைது செய்த போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி உள்ளனர். கணவனே மனைவியை குத்தி கொன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.