“நடுரோட்டில் மனைவி மீது ஆசிட் ஊற்றிய கணவர்” - விவாகரத்து பெற்ற நான்கு மாதங்களில் கொடூரம்..பட்டப்பகலில் நடந்த பயங்கரம்!

தான் மறைத்து வைத்திருந்த ஆசிட்டை எடுத்து திடீரென அன்புராணியின் முகத்தில் வீசியதாக கூறப்படுகிறது...
“நடுரோட்டில் மனைவி மீது ஆசிட் ஊற்றிய கணவர்” - விவாகரத்து பெற்ற நான்கு மாதங்களில் கொடூரம்..பட்டப்பகலில் நடந்த பயங்கரம்!
Published on
Updated on
1 min read

விழுப்புரம் நகரம் முத்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவருக்கும் அன்பு ராணி என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு மூன்று குழந்தைகள் உள்ள நிலையில் கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, இருவரும் சட்டப்படியாக பிரிந்து வாழ முடிவு செய்து நீதிமன்றத்தை நாடிய நிலையில், கடந்த 4 மாதங்களுக்கு முன்பு விவாகரத்து பெற்றுள்ளனர்.

விவாகரத்துக்குப் பிறகு அன்புராணி தனது மூன்று குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில், குழந்தைகளை பார்க்க வேண்டும் எனக் கூறி ராமச்சந்திரன் அடிக்கடி அன்புராணியின் வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்டதுடன், செல்போன் மூலமாகவும் அவரை தொடர்ந்து தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இன்று அன்புராணி விழுப்புரம் நகரப்பகுதியில் உள்ள திருவிக வீதியில், ஆஞ்சநேயர் கோவில் அருகே நடந்து சென்றுள்ளார். அப்போது அவரை பின் தொடர்ந்து சென்ற ராமச்சந்திரன், தான் மறைத்து வைத்திருந்த ஆசிட்டை எடுத்து திடீரென அன்புராணியின் முகத்தில் வீசியதாக கூறப்படுகிறது.

இதில் அன்புராணி மீது ஆசிட் பட்டதுடன், அருகே நடந்து சென்று கொண்டிருந்த கிருஷ்ணமூர்த்தி என்ற முதியவர் மீதும் ஆசிட் தெறித்து காயம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் இருவரும் வலியால் அலறிய நிலையில், ராமச்சந்திரன் அங்கிருந்து தப்பியோடியதாக கூறப்படுகிறது. சம்பவம் குறித்து தகவல் அறிந்த நகர போலீசார் உடனடியாக அங்கு சென்று, ஆசிட் வீச்சில் காயமடைந்த அன்புராணி மற்றும் கிருஷ்ணமூர்த்தியை மீட்டு அருகிலுள்ள நகராட்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர், இருவரும் மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஆசிட் வீச்சில் ஈடுபட்டதாக கூறப்படும் ராமச்சந்திரனை தீவிரமாக தேடி வருகின்றனர். விவாகரத்து பெற்று 4 மாதங்களே ஆன நிலையில், பட்டப்பகலில் பிரிந்து சென்ற மனைவி மீது கணவர் ஆசிட் வீசியதாக கூறப்படும் சம்பவம் விழுப்புரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com