

வேலூர் மாவட்டம், அரப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் கீர்த்திகா (வயது 30). சத்துவாச்சாரி பகுதியை சாலையை சேர்ந்த ஹரிபிரசாத் காதலித்து கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கும் 2 மகன்களும் உள்ளனர். ஹரிபிரசாத் கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கணவன் மனைவி இடையே கடந்த சில நாட்களாக கருத்துவேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு ஹரிபிரசாத் மனைவி கீர்த்திகாவை சரமாரியாக தாக்கி உள்ளார். இதனால் கீர்த்திகா அரபாக்கத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். கீர்த்திகாவின் தாய் விஜயா சத்துவாச்சாரி பகுதியில் உள்ள ஒரு திருமண தகவல் மையத்தில் வேலை செய்து வருகிறார். வீட்டில் இருந்தால் மகளை மருமகன் ஏதாவது செய்துவிடுவார், என்ற பயத்தில் தான் இன்று தான் வேலைசெய்யும் அலுவலகத்திற்கு கார்த்திகாவை அழைத்துச் சென்றுள்ளார்.
மனைவியை தேடி சத்துவாச்சாரி பகுதிக்கு சென்ற ஹரிபிரசாத், அவருக்கு போன் செய்து “எங்கே இருக்கிறாய்? என்று கேட்டுள்ளார். அதற்கு தனது தாய் வேலை செய்யும் அலுவலகத்தில் இருப்பதாக கார்த்திகா தெரிவித்துள்ளார். இதையடுத்து ஹரிபிரசாத் பட்டாக்கத்தி எடுத்துக்கொண்டு விஜயா வேலை செய்யும் அலுவலகத்திற்கு வந்து, தனது மனைவியை சரமாரியாக வெட்டியுள்ளார்.
இதில் கீர்த்திகாவுக்கு இரண்டு கை மணிக்கட்டுகள் துண்டாகி கழுத்து, முகம் மற்றும் தாடை ஆகிய பகுதியில் வெட்டியதில் ரத்த வெள்ளத்தில் துடித்துடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது தாய், ஹரிபிரஷாந்தை தடுக்க முயன்றுள்ளார். அப்போது அவரையும் வெட்டியதில் கையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து ஹரிபிரசாத் பட்டா கத்தியுடன் சாவகாசமாக வீட்டிற்கு வெளியே வந்து பைக்கில் ஏறி சென்று சத்துவாச்சாரி போலீசில் சரணடைந்தார்.
தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கீர்த்திகாவின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் காதல் மனைவி வெட்டி கொலை செய்த சம்பவம் சத்துவாச்சாரி பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.