மனைவியின் துண்டிக்கப்பட்ட தலையுடன் கோவிலில் அமைதியாக உட்கார்ந்திருந்த கணவனின் தோற்றத்தை கண்டு உள்ளூர்வாசிகள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். மேற்கு வங்கத்தின் தட்சிண தினாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள கங்காரம்பூர் பகுதி மக்கள், கடந்த புதன்கிழமையன்று (நவ 4) ஒரு கோரமான காட்சியைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். அப்பகுதியில் உள்ள ஒரு கோவிலுக்குள், உள்ளூர்வாசி ஒருவர் தனது மனைவியின் துண்டிக்கப்பட்ட தலையுடன், இரத்தம் சொட்டச் சொட்ட அமர்ந்திருப்பதை அப்பகுதி மக்கள் கண்டுள்ளனர்.
ரிண்டு கோஷ் (47) என அடையாளம் காணப்பட்ட சந்தேக நபர், கோவிலுக்குள் அமைதியாக அமர்ந்திருந்துள்ளார். ஏதேனும் பிரச்சனையாக இருக்குமோ? என்று பார்க்க ஒரு அண்டை வீட்டுக்காரர் கோஷ்ஷை அணுகியுள்ளார். அப்போதுதான் அந்த அதிர்ச்சியளிக்கும் காட்சியை கண்டுள்ளார். கோஷ் தனது மனைவி சீமா சர்க்காரின் (42) துண்டிக்கப்பட்ட தலையை கையில் வைத்திருந்தபடி அமைதியாக அமர்ந்திருந்துள்ளார்.
அதன்பின்னர், பக்கத்து வீட்டுக்காரர் அலறி அடித்து அங்கிருந்து ஓடியுள்ளார். அவரது அலறல் சத்தம் அக்கம்பக்கத்தினர் அனைவரையும் வீட்டை விட்டு வெளியே வர வைத்துள்ளது. அதன் பின்னர் கோஷ், ஒரு கையில் தன் மனைவியின் தலையையும், மறுகையில் கட்டாரி என்ற கனமான விவசாயக் கத்தியையும் ஏந்தியபடி கோவிலை விட்டு வெளியே வந்துள்ளார்.
இதனையடுத்து, காவல்துறைக்கு இந்த சம்பவம் தொடர்பாக தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, உடனடியாக அங்கு வந்த ஒரு குழு, அப்பகுதியைச் சுற்றி வளைத்து, கோஷைக் கைது செய்துள்ளது. அதிகாரிகள் பாதிக்கப்பட்டவரின் தலையை மீட்டதோடு, அவரது தலையற்ற உடலை வீட்டில் கண்டெடுத்துள்ளனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக கிடைத்த தகவல்களின்படி, போலீசார் கோஷை அழைத்துச் சென்றபோது, கோஷ், “நான் சைக்கோ ஆகிவிட்டேன்” என்று கத்தியுள்ளார். மேலும், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா, தம்பதியினருக்கு 5 வயது மற்றும் சுமார் 12 வயதுடைய இரண்டு குழந்தைகள் உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், இந்த கொலை நடக்கும்போது அந்த குழந்தைகள் சம்பவ இடத்தில் அதாவது வீட்டில் இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், கோஷ் மது போதையில் இருந்ததற்கான அதரங்கள் எதுவும் காவல்துறையினருக்கு கிடைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், உள்ளூர்வாசிகள் கூற்றுப்படி, கோஷ் அரசுப் பேருந்து நடத்துநராகப் பணிபுரிந்து வந்துள்ளார். ஆனால், அவர் வேலையிழந்து வீட்டில் இருந்து வந்ததாகவும் அவர் தெரிவித்துள்னர். அவர் வேலையை விட்டு அவராகவே நின்றுவிட்டாரா? அல்லது அவரை வேலையை விட்டு பணிநீக்கம் செய்துவிட்டனரா? என்பது பற்றி தெரியவில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதன் பின்னர், கோஷின் உறவினரான ராஜேஷ் பிரமாணிக், கோஷ் சமீபகாலமாக விசித்திரமாக நடந்துகொண்டதாகவும், அசைவத்தில் இருந்து கடுமையாக சைவ உணவிற்கு மாறியதாகவும், ஒரு மந்திரவாதி போல நடந்துகொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தம்பதியினரின் உறவில் பிரச்சனைகள் இருந்து வந்ததாகவும், ஆனால் அது இப்படி ஒரு கொடூர கொலைக்கு வழிவகுக்கும் என்று யாரும் கற்பனை செய்யவில்லை என்றும் அக்கம்பக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.