

உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயது இளைஞர் ஒருவர், சவுதி அரேபியாவின் ரியாத்தில் இருந்து தனது மனைவியுடன் வீடியோ காலில் பேசிக்கொண்டிருக்கும்போதே தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த அக்டோபர் 26ஆம் தேதி இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்ததாக அங்கிருக்கும் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தின் முசாபர்நகர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆஸ் முகமது அன்சாரி என்ற அந்த இளைஞருக்கு, இதே ஆண்டு ஏப்ரல் 7ஆம் தேதி சானியா (21) என்ற பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது. திருமணம் ஆன பிறகு சில மாதங்கள் மனைவியுடன் இருந்துவிட்டு, சுமார் இரண்டரை மாதங்களுக்கு முன்புதான் அவர் வேலைக்காக சவுதி அரேபியாவுக்குச் சென்றார். அவர் ரியாத்தில் உள்ள ஒரு சொத்துத் தரகரிடம் உதவியாளராகப் பணிபுரிந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை அவர் தனது மனைவியுடன் காணொளி அழைப்பில் பேசியுள்ளார். அப்போது அவர்களுக்குள் சூடான வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், சண்டையின் உச்சத்தில் ஆஸ் முகமது அன்சாரி தனது அறையில் மேற்கூரையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாகவும் கூறப்படுகிறது. மனைவி சானியா தன் கணவர் இப்படி ஒரு விபரீத முடிவை எடுப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து அலறியுள்ளார்.
உடனடியாக மனைவியின் அலறலைக் கேட்ட உறவினர்கள் சவுதியில் உள்ள ஆஸ் முகமது அன்சாரியின் உறவினர்களுக்கு தகவல் கொடுத்துள்ளனர். அவர்கள் விரைந்து சென்று அவரது அறையைப் பார்த்தபோது, அவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளார். தற்போது அவரது உடலை இந்தியாவுக்கு, அதாவது முசாபர்நகருக்குக் கொண்டு வருவதற்கான வேலைகள் நடந்து வருவதாக உறவினர் அம்ஜத் அலி கூறியுள்ளார்.
சவுதி அரேபியாவில் உள்ள இந்தியத் தூதரகத்திடம் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும், அவரது உடலை சொந்த ஊருக்குக் கொண்டு வருவதற்கான ஆவணப் பணிகள் நடந்து வருகின்றன என்றும் குடும்பத்தினர் தெரிவித்தனர். கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட சண்டைக்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். வெளிநாட்டில் வேலை தேடிச் சென்ற இடத்தில் இப்படி ஒரு சோகமான சம்பவம் நடந்திருப்பது அனைவரையும் கலங்க வைத்துள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.