

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மருதுபாண்டியர் நகரைச் சேர்ந்தவர் 50 வயதுடைய பாண்டிகுமார். இவரது மனைவியான 45 வயதுடைய மகேஸ்வரி கடந்த 2025-ம் ஆண்டு நவம்பர் 6-ஆம் தேதி காரைக்குடி அருகே ஆவுடைபொய்கை தைல மரக் காட்டுப் பகுதியில் காருக்குள் கொடூரமாக கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக குன்றக்குடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, சம்பவ இடம் மற்றும் சுற்றுப்புறங்களில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். அதில், மகேஸ்வரியின் பணிக்கு அவ்வப்போது ஆக்ட்டிங் ஓட்டுநராக வந்த 30 வயதுடைய சசிகுமார் என்பவர் கடைசியாக அவரை அழைத்து சென்றது தெரியவந்தது. பின்னர் அவரை பிடித்து பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
சசிகுமார் அளித்த வாக்குமூலம் :
மகேஸ்வரி நடத்தி வந்த பணம் கொடுக்கல் வாங்கல் தொழிலுக்கு அதிக பணம் தேவைப்பட்டதால் டிரைவர் சசிகுமார் வேறொரு நபரிடம் பெரிய அளவில் கடன் வாங்கி அவருக்கு பணம் கொடுத்ததாகவும், அந்த பணத்தை திருப்பி கேட்டபோது கொடுக்காமல் நீண்ட நாட்கள் மகேஸ்வரி இழுத்தடித்ததாகவும், அதே நேரத்தில் பணம் கொடுத்தவர் சசிகுமாரை பணத்தை கேட்டு தொல்லை செய்து வந்த நிலையில் மகேஸ்வரியை கொள்ள திட்டமிட்டதாக தெரிவித்தார். அதன்படி சம்பவத்தன்று ஆவுடைப்பொய்கை பகுதியில் வீட்டு மனையை பார்ப்பதற்கு மகேஸ்வரி உடன் ஓட்டுநராக சசிகுமாருடன் சென்றுள்ளார். அங்கு வைத்து கொடுத்த பணத்தை கேட்ட சசிகுமாருக்கும் மகேஸ்வரிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ள நிலையில் அப்போது ஆத்திரம் அடைந்த சசிகுமார் மகேஸ்வரி முகத்தில் கல்லால் தாக்கி கொலை செய்துள்ளார். பின்னர் அவர் அணிந்திருந்த 20 பவுன் நகைகளை எடுத்துக்கொண்டு அருகிலுள்ள தோட்ட கிணற்றில் குளித்து விட்டு அங்கிருந்து தப்பி என வாக்குமூலம் அளித்துள்ளார்.
விசாரணையில் வெளியான உண்மை :
ஆனால் இந்த வழக்கில் தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட போலீசார், சசிகுமார் கூறியது போல மகேஸ்வரி அவரிடம் எந்த பணமும் வாங்கவில்லை எனவும் அதற்கு மாறாக சசிகுமார் தான் அவ்வப்போது மகேஸ்வரியிம் பணத்தை வாங்கி அதை திரும்ப கொடுக்காமல் இருந்ததாகவும் தெரிவித்தனர் மேலும் அந்த பணத்தை மகேஸ்வரி திரும்ப கேட்ட நிலையில் அவருக்கு நிலத்தை வாங்கி தருவதாக ஏமாற்றி அழைத்து சென்ற சசிகுமார் அங்கு வைத்து அவரை சரமாரியாக அடித்தும், காரின் கதவுகளால் யை நசுக்கியும் கொன்று நகையை எடுத்து கொண்டு தப்பி சென்றதாக கூறி அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பழிதீர்க்க கணவன் ஏவிய கூலிப்படை :
இந்நிலையில் அந்த வழக்கில் இருந்து சமீபத்தில் சசிகுமார் ஜாமினில் வெளியே வந்த நிலையில் தனது மனைவியை கொலை செய்த சசிகுமாரை பழிவாங்க தீர்மானித்த பாண்டிகுமார், சிவகங்கையைச் சேர்ந்த பிரபல ரவுடியும் கூலிப்படை தலைவருமான அரவிந்தை அணுகி கொலைக்கு சதித்திட்டம் தீட்டியதாக சொல்லப்படுகிறது. சசிகுமாரை கொலை செய்தால் ரூ.15 லட்சம் வழங்குவதாக கூறி, அதில் முன்பணமாக ரூ.8.50 லட்சம் வழங்கியுள்ளார். எனவே கடந்த 21-ஆம் தேதி, சிவகங்கை நீதிமன்றத்தில் கொலை வழக்கில் ஆஜராக வந்த சசிகுமாரை, நீதிமன்ற வளாகத்திலேயே தீர்த்துக்கட்ட அரவிந்த் தலைமையிலான 8 பேர் கொண்ட கும்பல் திட்டம் திட்டியுள்ளனர். ஆனால் நீதிமன்றத்தில் பாதுகாப்பு அதிகமாக இருந்ததால் அங்கு தாக்க முடியாமல், வெளியேறியுள்ளனர்.
இருப்பினும் நீதிமன்றத்திலிருந்து வெளியேறிய சசிகுமார் சென்ற இருசக்கர வாகனத்தை ஒரு கார், ஒரு ஆட்டோ மற்றும் இரண்டு இருசக்கர வாகனங்களில் பின் தொடர்ந்து கண்காணித்துள்ளனர். பின்னர் தளக்காவூர் பெட்ரோல் பங்க் அருகே சசிகுமார் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது காரை மோதவிட்டு விபத்து ஏற்படுத்தி, கீழே விழுந்த சசிகுமாரை அரிவாளுடன் விரட்டி கொலை செய்ய முயன்ற நிலையில், அவர் தப்பித்து ஓடி அவசர எண் 100-க்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து நாச்சியாபுரம் காவல் நிலைய போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தினர்.
எனவே தனிப்படை போலீசார் கீரணிப்பட்டி, கல்லல் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, சசிகுமாரை தொடர்ந்து வந்த கார், ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்கள் அடையாளம் காணப்பட்டன. இதன் அடிப்படையில் திருக்கோஷ்டியூரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் குட்லக் தனசேகரன் (48), சிவகங்கையைச் சேர்ந்த அபிராகுல் (25) ஆகியோரை கைது செய்து விசாரித்தனர். விசாரணையில், அரவிந்த் தலைமையிலான 8 பேர் கொண்ட கூலிப்படை இந்த கொலை முயற்சியில் ஈடுபட்டது உறுதியானது. மேலும், சசிகுமாரை கொலை செய்ய முடியாத ஆத்திரத்தில், அதே இரவு கீழப்பூங்கொடி பகுதியில் மற்றொரு நபரை அரிவாளால் வெட்டிய சம்பவமும் வெளிச்சத்துக்கு வந்தது.
இதையடுத்து, கொலை சதிக்கு மூளையாக செயல்பட்டதாக மகேஸ்வரியின் கணவர் பாண்டிகுமாரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய கூலிப்படை தலைவன் அரவிந்த் மற்றும் சிவகங்கையைச் சேர்ந்த பாண்டி, மனோஜ், பிரபு உள்ளிட்ட மேலும் சிலரை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். ஒரே நாளில் இரண்டு கொலை முயற்சிகளில் ஈடுபட்டதாக கூறப்படும் இந்த கூலிப்படை கும்பல் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மனைவியை கொன்ற வாலிபரை பழிவாங்க கணவன் 7 மாதங்களுக்கு பிறகு கூலிப்படையை ஏவிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.