முன்னாள் மனைவியின் மறுமணத்தால் ஆத்திரம்! கனடா வேலை போனதால் கத்தியை எடுத்த மென்பொறியாளர்! ஐதராபாத்தில் ரத்தக் கறை!

விவாகரத்து பெற்ற சுனிதா, 2025 ஏப்ரல் மாதம் மறுமணம் செய்துகொண்டது மகேஷின் ஆத்திரத்தை...
முன்னாள் மனைவியின் மறுமணத்தால் ஆத்திரம்! கனடா வேலை போனதால் கத்தியை எடுத்த மென்பொறியாளர்! ஐதராபாத்தில் ரத்தக் கறை!
Published on
Updated on
1 min read

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில், ஒரு முன்னாள் கணவன் தனது விவாகரத்து பெற்ற மனைவியைப் பின்தொடர்ந்து சென்று, அவரது வீட்டிலேயே வைத்துத் தலையில் குத்திக் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. விவாகரத்து செய்த பிறகும் அடங்காத வன்மம் மற்றும் பழிவாங்கும் எண்ணமே இந்தச் சோகத்திற்கு அடிப்படையாக அமைந்துள்ளது.

இந்தத் தம்பதியினருக்கு கடந்த 2022-ஆம் ஆண்டு இந்தியாவில் திருமணம் நடைபெற்றது. கணவன் கனடாவில் உள்ள ஒரு ஐடி (IT) நிறுவனத்தில் பணியாற்றி வந்ததால், மனைவியும் அவருடன் கனடா சென்றார். ஆனால், அங்கு இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக, மனைவி இந்தியா திரும்பினார். பின்னர், தனது கணவர் மீது மகாராஷ்டிராவில் 'குடும்ப வன்முறை' (Domestic Violence) வழக்கைத் தொடர்ந்தார். இதன் விளைவாக, 2024-ஆம் ஆண்டு இருவரும் சட்டப்படி விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

கடந்த 2025 மார்ச் மாதம், மகேஷின் தாய் உயிரிழந்ததால் அவர் இந்தியா திரும்பினார். ஆனால், சுனிதா தொடர்ந்திருந்த குடும்ப வன்முறை வழக்கின் காரணமாக, மகேஷிற்கு எதிராக 'லுக்-அவுட்' நோட்டீஸ் வழங்கப்பட்டு, அவரது பாஸ்போர்ட்டும் முடக்கப்பட்டது. இதனால் அவரால் மீண்டும் கனடா சென்று பணியில் சேர முடியவில்லை. தனது வேலை பறிபோனதற்கும், தனது தாயின் மரணத்திற்கும் சுனிதாவே காரணம் என்று மகேஷ் நம்பினார். விவாகரத்து பெற்ற சுனிதா, 2025 ஏப்ரல் மாதம் மறுமணம் செய்துகொண்டது மகேஷின் ஆத்திரத்தை மேலும் தூண்டியது.

சுனிதாவைப் பழிவாங்கத் துடித்த மகேஷ், அவரது சமூக வலைதளப் பக்கங்கள் மூலம் அவர் ஐதராபாத்தில் வசிக்கும் முகவரியைக் கண்டுபிடித்தார். கடந்த இரண்டு மாதங்களாக ஐதராபாத்தில் ஒரு விடுதியில் தங்கியிருந்து, சுனிதாவின் நடமாட்டங்களைக் கண்காணித்து (Recce) வந்துள்ளார். நேற்று முன்தினம், இரண்டு கத்திகள், ஒரு துளையிடும் இயந்திரம் (Drilling machine) மற்றும் ஐந்து லிட்டர் பெட்ரோல் ஆகியவற்றுடன் சுனிதாவின் அடுக்குமாடி குடியிருப்புக்குச் சென்றார்.

அங்கு, வீட்டிற்குள் நுழைந்த மகேஷ், சுனிதா இருந்த அறைக்குள் புகுந்து கதவை உட்புறமாகத் தாழிட்டுக் கொண்டார். தான் கொண்டு வந்த கத்தியால் சுனிதாவின் தலையில் பலமுறை குத்தினார். இதில் சுனிதா அந்த இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். தகவல் அறிந்து காவல்துறையினர் வந்தபோது, அறை முழுவதும் பெட்ரோலை ஊற்றிவிட்டு, கழிவறைக்குள் சென்று தற்கொலை செய்துகொள்ளப்போவதாக மிரட்டினார். பின்னர் காவல்துறையினர் அவரைச் சமாதானப்படுத்தி கைது செய்தனர்.

இந்நிலையில், கொல்லப்பட்ட சுனிதா மூன்று மாத கர்ப்பிணியாக இருந்ததாக அவரது இரண்டாவது கணவர் தெரிவித்துள்ளார். இருப்பினும், பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே இது உறுதி செய்யப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com