

சென்னை அரும்பாக்கம் பகுதியை சேர்ந்த 24 வயதுடைய இளம் பெண் ஒருவர் தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பெண்ணுக்கு இன்ஸ்டாகிராம் மூலம் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ஜெகன் என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் நண்பர்களாக பழகி வந்த நிலையில் ஒரு கட்டத்தில் ஜெகன் இளம்பெண்ணை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்ளலாம் என ஆசைவார்த்தை கூறியுள்ளார். இதனை நம்பி இளம்பெண்ணும் அவர் காதலை ஏற்றுக் கொண்டுள்ளார். பின்னர் இருவரும் அடிக்கடி நேரில் சந்தித்து நெருங்கி பழகி வந்ததாக கூறப்படுகிறது.
நாளடைவில் காதலன் ஜெகனுக்கு ஏற்கனவே திருமணமாகி பிள்ளைகள் இருப்பது இளம்பெண்ணுக்கு தெரியவந்தது. உடனே அந்த பெண் இதுகுறித்து ஜெகனிடம் கேட்ட போது அவர் முறையாக பதில் அளிக்காமல் மிரட்டியுள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட பெண் ஜெகன் உடனான காதலை முறித்து கொண்டு அவருடன் பேசுவதை நிறுத்தி கொண்டார்.
இதனால் ஆத்திரமடைந்த ஜெகன் இளம்பெண்ணை தொடர்பு கொண்டு இருவரும் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி விடுவேன் என மிரட்டி வந்தால் பயந்து போன பெண் இதுகுறித்து அரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ஜெகன் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் ஜெகனை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.