

விழுப்புரம் மாவட்டத்தில் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பாக கடந்த சனிக்கிழமை (ஜூலை 04) ஒரே நாளில் அடுத்தடுத்து மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ள நிலையில், அவர்களில் ஒருவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்துச் சென்றபோது, பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தையை போலீசார் முன்னிலையிலேயே ஆவேசமாக மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குற்றம் - 1
போலீசார் தரப்பில் வெளியான தகவலின்படி, புதுச்சேரி காராமணிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த அரவிந்த் என்ற இளைஞரும், விழுப்புரம் பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய சிறுமியும் சில காலமாக பழகி வந்ததாக கூறப்படுகிறது. பின்னர் அரவிந்தின் நடவடிக்கைகள் பிடிக்காததால், அவருடன் பேசுவதையும் பழகுவதையும் அந்த சிறுமி நிறுத்தியதாக சொல்லப்படுகிறது.இதனால் ஆத்திரமடைந்த அரவிந்த், சிறுமியை தொடர்புகொண்டு, "மீண்டும் என்னை காதலிக்க வேண்டும். இல்லையெனில் நாம் ஒன்றாக இருந்தபோது எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவேன்" என்று மிரட்டியதாக கூறப்படுகிறது.
இந்த மிரட்டலால் மனஉளைச்சலுக்கு ஆளான சிறுமி, நடந்த சம்பவம் குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து, சிறுமியின் பெற்றோர் விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில், போலீசார் அரவிந்த் மீது போக்சோ சட்டம் மற்றும் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
குற்றம் - 2
அதேபோல், விழுப்புரம் அருகே உள்ள திருப்பாச்சனூர் கிராமத்தைச் சேர்ந்த ரஞ்சித் என்பவர், கடைக்குச் சென்று விட்டு வீட்டிற்கு நடந்து சென்ற 11-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயதுடைய சிறுமியிடம் அத்துமீறிய பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி வீட்டிற்கு சென்று பெற்றோரிடம் நடந்த சம்பவத்தை கூறி கதறி அழுதுள்ளார். இதையடுத்து, அவரது பெற்றோர் விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில், ரஞ்சித் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரையும் கைது செய்தனர்.
குற்றம் - 3
இதனைத் தொடர்ந்து, கண்டமங்கலம் அருகே உள்ள சின்னபாபுசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த பிரசாந்த் என்பவர், 9-ஆம் வகுப்பு படித்து வரும் 13 வயதுடைய சிறுமி பள்ளிக்கு செல்லும் போதும், பள்ளி முடிந்து வீடு திரும்பும் போதும் வழிமறித்து, தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தி, அவரது கையைப் பிடித்து இழுத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்திருக்கிறார். இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், பிரசாந்த் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த விழுப்புரம் மகளிர் போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இந்நிலையில், இந்த மூன்று வழக்குகளில் கைது செய்யப்பட்டவர்களில் அரவிந்தை நீதிபதி முன்பு ஆஜர்படுத்த போலீசார் அழைத்துச் சென்றபோது, பாதிக்கப்பட்ட 17 வயது சிறுமியின் தந்தை போலீசார் முன்னிலையிலேயே ஆத்திரமடைந்து, "உன் கழுத்தை வெட்டிடுவேன்" என்று மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், போலீசார் உடனடியாக அவரை சமாதானப்படுத்தி அங்கிருந்து அப்புறப்படுத்தினர். விழுப்புரத்தில் ஒரே நாளில் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் அடுத்தடுத்து மூன்று பேர் கைது செய்யப்பட்டதோடு, நீதிமன்ற வளாகத்தில் நடந்த இந்த மிரட்டல் சம்பவமும் விழுப்புரம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.