
ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே உள்ள விலாங்காட்டு வலசு கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி கவுண்டர் (75) அவரது மனைவி பாக்கியம்(65). இவர்களுக்கு கவிசங்கர் (47) என்ற மகனும், பானுமதி (50) என்ற மகளும் உள்ளனர். இவர்கள் இருவருக்கும் திருமணமாகி விட்டது.
பிள்ளைகள் இருவரும் குடும்பத்தோடு வேறு ஊர்களில் வசித்து வரும் நிலையில் ராமசாமியும், பாக்கியமும் ஆடு மாடுகளை வைத்து விவசாயம் செய்து தனியே வாழ்ந்து வந்தனர்.
இந்நிலையில், ராமசாமி கடந்த இரண்டு நாட்களாக வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்துள்ளார். மேலும் அவரது மகன் கவிசங்கர் செல்போன் மூலம் அழைத்தும் போனை எடுக்காததால் அருகாமையில் உள்ள உறவினர்கள் மூலமாக வீட்டிற்குச் சென்று பார்க்கச் சொல்லி உள்ளார்.
வீட்டிற்கு சென்று பார்த்த உறவினர்கள் வீட்டில் துர்நாற்றம் வீசியதை தொடர்ந்து உடனடியாக சிவகிரி போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்து பார்த்த போலீசார் ராமசாமி வீட்டின் உள்ளேயும் அவரது மனைவி பாக்கியம் வீட்டின் வெளியேயும் கொலை செய்யப்பட்ட நிலையில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே போலீசார் பிரேதத்தை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
பாக்கியம் அணிந்திருந்த தாலிக்கொடி மற்றும் தங்க வளையல் உட்பட 10.45 பவுன் நகைகள் கொள்ளை போய் உள்ளது, முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.
மாவட்ட எஸ்பி., சுஜாதா கொலை நடந்த வீடு மற்றும் தோட்டங்களில் ஆய்வு செய்து வீட்டுக்கு அருகே வசிப்பவர்களிடம் விசாரணை நடத்தினர்.
இதனிடையே கொலையாளிகளை பிடிக்க மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விவேகானந்தன் தலைமையில் 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை தொடங்கியுள்ளதாகவும் , சிசிடிவி ஆய்வு நடைபெற்று வருவதாகவும் மாவட்ட காவல் காணிப்பாளர் சுஜாதா தெரிவித்துள்ளார்.இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு ஈரோடு எஸ்பி, மாவட்ட சுஜாதா மற்றும் மோப்பநாய் பிரிவினர், கைரேகை நிபுணர்கள் ஆகியோர் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்