கிருத்திகா பட்டேல் கடத்தப்பட்ட வழக்கில்.... தந்தையை 15 நாட்கள் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு...!

கிருத்திகா பட்டேல் கடத்தப்பட்ட வழக்கில்....  தந்தையை 15 நாட்கள் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு...!
Published on
Updated on
2 min read

தென்காசி மாவட்டம் இலஞ்சி அருகே உள்ள கொட்டாக்குளம் பகுதியை சேர்ந்த கிருத்திகா பட்டேல்-வினித் காதல் தம்பதினரை பிரித்து கிருத்திகா கடத்தப்பட்டதாக கூறப்படும் வழக்கில், கிருத்திகாவின் பெற்றோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர்.

இந்த நிலையில், கிருத்திகாவின் பெற்றோர் முன்ஜாமின் கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனுதாக்கல் செய்த நிலையில், அது தொடர்பான விசாரணையின் போது கிருத்திகாவை நேரில் ஆஜர் செய்ய நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.  ஆனால், அவரது உறவினர்கள் ஆஜர் செய்த காரணத்தினால் கோபம் அடைந்த நீதிபதிகள் கிருத்திகா பட்டேலை ஆணவ படுகொலை செய்ய திட்டமிட்டுள்ளீர்களா என கேள்வி எழுப்பியதோடு அவரது பெற்றோர்கள் தாக்கல் செய்த முன்ஜாமின் மனுவையும் தள்ளுபடி செய்தனர்.

மேலும், கிருத்திகா பட்டேலின் பெற்றோரை கைது செய்து போலீசார் தேவைப்பட்டால் விசாரித்துக் கொள்ளலாம் என நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்த நிலையில், தென்காசி காவல் ஆய்வாளர் பாலமுருகன் தலைமையிலான குழுவினர் கிருத்திகாவின் பெற்றோரை கைது செய்வதற்காக குஜராத் விரைந்தனர்.

இந்த நிலையில், நேற்று நள்ளிரவு கிருத்திகா பட்டேலின் தந்தையான நவீன் பட்டேல் என்பவரை போலீசார் கைது செய்த நிலையில், அவரை விமானம் மூலம் திருவனந்தபுரம் அழைத்து வந்து அங்கிருந்து குற்றாலம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.  அவருடன் கிருத்திகாவையும் போலீசார் அழைத்து வந்த நிலையில், இன்று செங்கோட்டை நீதிமன்ற நடுவர் சுனில் ராஜா முன்பு ஆஜர் செய்தனர்.  அப்போது, நவீன் பட்டேலை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

 தொடர்ந்து, கிருத்திகா பட்டேலிடம் நீதிபதி விசாரணை நடத்திய போது, தான் காப்பகத்திற்கு செல்ல விருப்பமில்லை எனவும், எனது உறவினர் ஒருவரின் வீட்டுக்கு செல்ல விரும்புதாகும் தெரிவித்தார்.  சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற இந்த விசாரணையின் போது, கிருத்திகா பட்டேலிடம் நீதிபதி சுனில்ராஜா ஒப்புதல் வாக்குமூலம் எழுத்துப்பூர்வமாக பெற்று, அவர் விருப்பப்படி உறவினர் வீட்டில் தங்குவதற்கு அனுமதி வழங்கினார்.

 மேலும், கிருத்திகா பட்டேலின் பாதுகாப்பு கருதி போலீசார் அவரை காப்பகத்தில் வைக்க வேண்டும் என கூறிய நிலையில், கிருத்திகா பட்டேல் தற்போது தங்க உள்ள வீட்டின் முழு முகவரியையும் போலீசாருக்கு கொடுக்க வேண்டும் எனவும், போலீசார் அவருக்கு பாதுகாப்பு வழங்குவார்கள் எனவும் தெரிவித்தார்.

மேலும், இந்த வழக்கு தொடர்பாக போலீசார் விசாரணைக்கு கிருத்திகா பட்டேல் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும், இல்லை என்றால் மீண்டும் காப்பகத்தில் அடைக்க நேரிடும் எனவும் நீதித்துறை நடுவர் சுனில்ராஜா எச்சரிக்கை விடுத்தார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com