“நோயாளிகள் பெயரில் போலி மரபணு சோதனை” - ரூ.800 கோடி சுருட்டல்.. அமெரிக்காவை உலுக்கிய இந்திய வம்சாவளி மருத்துவரின் மோசடி!

நோயாளிகளுக்கு மருத்துவர்கள் மரபனு சோதனை செய்ய பரிந்துரைத்தது போல் சான்றிதழ்களையும் தயாரித்துள்ளார்...
Kadhir Khan Mohamed Medicare Fraud
Kadhir Khan Mohamed Medicare Fraud
Published on
Updated on
2 min read

நோயாளிகளின் பெயரையும், மருத்துவர்களின் பெயரையும் பயன்படுத்தி, போலியான பரிசோதனை ஆவணங்களைக் சமர்பித்து 800 கோடி ரூபாய்க்கும் மேல் மோசடி செய்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நபர் ஒருவர் அமெரிக்காவின் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். காதீர் கான் முகமது- இந்த பெயர் சமீபத்திய அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல உலக நாடுகளின் செய்தி ஊடகங்களில் முக்கிய பெயராக வலம் வந்து கொண்டிருக்கிறது. மருத்துவத்துறை மற்றும் காப்பீட்டு நிறுவனங்களையும் கலக்கத்தில் ஆழ்த்தியுள்ள இவர், அமெரிக்காவில் இதுவரை இல்லாத அளவுக்குப் பொது சுகாதாரத் துறையை ஏமாளியாக்கி பல கோடிகளை சுருட்டி ஏப்பம் விட்டுள்ளார்.

அமெரிக்காவில் ஒருவர் மெடிகேர் திட்டத்தின் கீழ் சிகிச்சை பெறும்போது, அவர் மருத்துவமனைக்கோ அல்லது பரிசோதனைக் கூடத்திற்கோ ரொக்கமாகவோ அல்லது நேரடியாகவோ பணம் கொடுக்கத் தேவையில்லை. மாறாக, சோதனையை அல்லது சிகிச்சையை வழங்கிய நிறுவனமே அரசுக்கு நேரடியாகப் பில் அனுப்பி பணத்தை தனது வங்கி கணக்கில் பெற்றுக்கொள்ளும். அதிலும் அங்கீகரிக்கப்பட்ட லேப் அல்லது மருத்துவ நிறுவனத்தின் கணக்கிற்கு மட்டுமே அரசு நேரடியாகப் பணத்தை செலுத்தும் முறை இருந்து வருகிறது.

இந்நிலையில் டெக்சாஸ் மாகாணம் ரிச்சர்ட்சன் நகரில் 'அமெரிக்கன் பிரீமியர் லேப்ஸ்' (American Premier Labs LLC) என்ற பரிசோதனைக் கூடத்தை நடத்தி வந்த காதீர் கான் முகமது, நோயாளிகளுக்கு லட்சக்கணக்கில் மரபணு சோதனைகள் நடத்தியது போல் போலி கணக்குகளைத் தயாரித்து அரசுக்கு அனுப்பி வைத்துள்ளதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவில் மருத்துவப் பணிகள் செய்யும் ஒவ்வொரு மருத்துவருக்கும் பிரத்யேகமாக வழங்கப்பட்டு இருக்கும் அடையாள எண்களையும் சான்றிதழ்களையும் போலியாக தயாரித்த காதீர் கான், நோயாளிகளுக்கு மருத்துவர்கள் மரபனு சோதனை செய்ய பரிந்துரைத்தது போல் சான்றிதழ்களையும் தயாரித்துள்ளார்.

உண்மையில் எந்தவொரு நோயாளிக்கும் மரபணு பரிசோதனைகள் (Genetic Testing) செய்யப்படவே இல்லை. ஆனால், ஏதோ லட்சக்கணக்கில் சோதனைகள் நடந்தது போல் போலி கணக்குகளைத் தயாரித்து அரசுக்கு அனுப்பி வைத்து 93 மில்லியன் டாலர் அதாவது இந்திய மதிப்பில் சுமார் 800 கோடி ரூபாய்க்கும் மேல் மோசடி செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மோசடியின் உச்சக்கட்டமாக, 2023ஆம் ஆண்டில் 10 நாட்களுக்குள் மட்டும் சுமார் 13 மில்லியன் டாலர்கள் அவசரமாகச் சுருட்டப்பட்டுள்ளது அமெரிக்க சுகாதார துறையை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

இதனையடுத்து எஃப்பிஐ (FBI) மற்றும் சுகாதாரத் துறை அலுவலகம் இணைந்து வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய காதீர் கான் முகமது தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து கைது செய்ய வலை வீசியுள்ளது. தற்போது இவர் இந்தியாவின் ஹைதராபாத் நகரில் பதுங்கி இருக்கலாம் என்று அமெரிக்க அதிகாரிகள் சந்தேகித்து தேடுதல் பணியினை முடுக்கிவிட்டுள்ளனர்.

நோயாளிகளின் பெயர்களையும், மருத்துவர்களின் உழைப்பையும், அரசாங்கத்தின் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களையும் ஒரு தூண்டிலாகப் பயன்படுத்தி, கோடிக்கணக்கில் சுருட்டப்பட்ட இந்த மோசடி, உலகளாவிய சுகாதார அமைப்புகளில் உள்ள பாதுகாப்பு ஓட்டைகளை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com