
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான்டா கிளாரா நகரில், தெலங்கானாவைச் சேர்ந்த இந்திய மாணவர் ஒருவர் அமெரிக்க காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதல் இனவெறி காரணமாக நடந்திருக்கலாம் என்று அவரது குடும்பத்தினர் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.
நடந்தது என்ன?
கடந்த செப்டம்பர் 3 அன்று, தெலங்கானாவின் மஹபூப்நகர் மாவட்டத்தைச் சேர்ந்த 32 வயதான முகமது நிஜாமுதீன், தனது அறை நண்பருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக அமெரிக்க காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த வாக்குவாதம் தீவிரமடைந்த நிலையில், நிஜாமுதீன் கத்தியால் தனது நண்பரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்போது, நிஜாமுதீன் அதிகாரிகளை அச்சுறுத்தியதால், அவர்கள் அவரைச் சுட்டுக்கொன்றதாகக் காவல்துறை விளக்கமளித்துள்ளது.
குடும்பத்தினரின் மறுப்பு
இந்தச் சம்பவத்தால் அதிர்ச்சியடைந்துள்ள நிஜாமுதீனின் குடும்பத்தினர், காவல்துறை அளித்துள்ள விளக்கத்தை ஏற்க மறுத்துள்ளனர். நிஜாமுதீன் மிகவும் அமைதியானவர் என்றும், மதப் பற்றுள்ளவர் என்றும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். வெளிநாட்டில் அவர் எந்தவிதப் பிரச்சனையிலும் ஈடுபட்டதில்லை என்றும், இந்தத் தாக்குதல் ஒருதலைபட்சமானது என்றும் அவர்கள் கூறியுள்ளனர். மேலும், இந்தச் சம்பவம் இனவெறி காரணமாக நடந்திருக்கலாம் என்று சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
தற்போது நிஜாமுதீனின் உடல் சான்டா கிளாராவில் உள்ள மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலை இந்தியா கொண்டுவர, குடும்பத்தினர் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்திடம் உருக்கமான கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த விவகாரத்தில் இந்திய அரசு உடனடியாகத் தலையிட்டு, அமெரிக்க அதிகாரிகளிடம் இதுகுறித்து முழுமையான விசாரணை நடத்த வலியுறுத்த வேண்டும் என்றும், நீதியை நிலைநாட்ட உதவ வேண்டும் என்றும் அவரது குடும்பத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.