“அரசு ஊழியரை கொன்று தூக்கில் மாட்டியதா குடும்பம்?” - இரண்டாவது திருமணம் செய்ய பிளான் போட்ட கணவன்.. போலீசில் கதறும் பெண்ணின் உறவினர்கள்!

நிலேஷ் போதைப்பழக்கத்திற்கு அடிமையானவர் என்றும், இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகவும்...
goverment employee mystry death
goverment employee mystry death
Published on
Updated on
1 min read

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள பொதுப்பணித்துறை (PWD) குடியிருப்பில் வசித்து வந்த அரசு பெண் பொறியாளர் ஆர்த்தி யாதவ் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதலில் இது தற்கொலை என கருதப்பட்ட நிலையில், தற்போது அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகள் வழக்கின் திசையையே மாற்றியுள்ளன. கணவர், மாமனார் மற்றும் மைத்துனர் ஆகியோர் கூட்டாகச் சேர்ந்து ஆர்த்தியைக் கொலை செய்துவிட்டு, அதை தற்கொலை போல சித்தரித்துள்ளதாக அவரது குடும்பம் குற்றம்சாட்டியுள்ளனர்.

ஆர்த்தி யாதவுக்கும் அவரது கணவர் நிலேஷுக்கும் ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில் ஆண் குழந்தை வேண்டும் என்ற காரணத்தால் நிலேஷுக்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்க அவரது குடும்பத்தினர் திட்டமிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த திட்டத்திற்கு தடையாக இருந்த ஆர்த்தியை கொலை செய்ய, அவர்கள் குடும்பமாக சேர்ந்து திட்டமிடப்பட்டதாக அவரது பெற்றோர் போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். மேலும், நிலேஷ் போதைப்பழக்கத்திற்கு அடிமையானவர் என்றும், இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக மேலும் பல அதிர்ச்சி தகவல்களையும் ஆர்த்தியின் உறவினர்கள் வெளியிட்டுள்ளனர். சம்பவத்தன்று காலை ஆர்த்தி 9 தூக்க மாத்திரைகள் உட்கொண்டதாக கூறப்படும் நிலையில், மயக்க நிலையில் இருந்த ஒருவர் சில மணி நேரங்களுக்குள் தானாகவே சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள முடியுமா?  என அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். முதலில் தூக்க மாத்திரைகள் கொடுத்து மயக்கமடையச் செய்துவிட்டு, பின்னர் தூக்கில் தொங்கவிட்டு தற்கொலை போல நாடகமாடியிருக்கலாம் என்ற சந்தேகத்தையும் அவர்கள் முன்வைத்துள்ளனர்.

இதையடுத்து ஆர்த்தியின் உடலை கைப்பற்றிய காவல்துறையினர் உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்து, வழக்கை பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். உடற்கூறாய்வு அறிக்கை, தடயவியல் ஆய்வு (FSL) முடிவுகள் மற்றும் குடும்பத்தினரிடம் நடத்தப்படும் விசாரணையின் அடிப்படையில்தான் இது தற்கொலையா அல்லது திட்டமிட்ட கொலையா என்பது உறுதியாகும் என போலீசார் தெரிவித்துள்ளனர். இரண்டு பெண் குழந்தைகளின் தாயாக இருந்த அரசு பெண் பொறியாளர் மர்மமான முறையில் உயிரிழந்த இந்த சம்பவம், மத்தியப் பிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com