

வாலாஜாபேட்டை அருகே காதலர்கள் இருவர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இளம்பெண் விஷம் குடித்தும், இளைஞர் தூக்கிட்டும் தற்கொலை செய்துகொண்டதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை அணைக்கட்டு சாலை பாரதி நகரைச் சேர்ந்தவர் பிரசாந்த் (28). இவர் போஸ்டர் மற்றும் மளிகைக் கடையில் வேலை செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. இவர், இன்ஸ்டாகிராம் மூலம் ஏற்பட்ட பழக்கத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை பகுதியைச் சேர்ந்த சுபுலட்சுமி (21) என்ற இளம்பெண்ணைக் காதலித்து வந்துள்ளார்.
இவர்களது காதலுக்கு சுபுலட்சுமியின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார் சுபுலட்சுமி. கடந்த ஓராண்டாக வாலாஜாபேட்டையில் உள்ள பிரசாந்த் வீட்டில் இருவரும் கணவன் - மனைவியாக வசித்து வந்துள்ளார்.
பிரசாந்த்துக்கு ஏற்கெனவே திருமணமாகி, கருத்து வேறுபாடு காரணமாக முதல் மனைவி பிரிந்து வாழ்வதாகக் கூறப்படுகிறது.
சமீபத்தில் பிரசாந்த் - சுபுலட்சுமி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகக் கூறப்படும் நிலையில், சுபுலட்சுமி வீட்டில் விஷம் குடித்தும், பிரசாந்த் மற்றொரு அறையில் தூக்கிட்டும் உயிரிழந்ததாகத் தெரிகிறது.
நீண்ட நேரமாக வீட்டின் கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த பிரசாந்தின் தம்பி விஜய் மற்றும் அவரது நண்பர்கள் உள்ளே சென்று பார்த்தபோது, இருவரும் உயிரிழந்து கிடந்ததைப் பார்த்துள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வாலாஜாபேட்டை போலீசார், இருவரின் உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமாகி, கடந்த ஓராண்டாகக் காதலித்து வந்த இருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்