ரூ.40 கோடிக்கு மேல் மோசடி செய்த ஈஷா குரூப்; திருச்சியில் பரபரப்பு!

ரூ.40 கோடிக்கு மேல் மோசடி செய்த ஈஷா குரூப்; திருச்சியில் பரபரப்பு!
Published on
Updated on
1 min read

திருச்சியில் ரூபாய் 40 கோடிக்கு மேல் மோசடி செய்ததாக ஈஷா குரூப் என்ற நிறுவனத்தின் மீது பாதிக்கப்பட்ட நபர்கள் புகார் அளித்துள்ளனர்.  

திருச்சி கே.கே.நகர் ஆயுதப்படை மைதானத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் காமினி தலைமையில் நடைபெற்றது. அப்போது திருச்சி காந்தி மார்க்கெட்டை சேர்ந்த ஹரி பரந்தாமன் என்பவர்  தலைமையில் 20க்கும் மேற்பட்டோர் காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்தனர்.

அதில் திருச்சி, தில்லை நகரை சேர்ந்த முகமது பாரூக் என்பவர் ஈஷா குரூப் என்ற நிறுவனத்தை கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் தான் நடத்தி வருவதாகவும், தனது நிறுவனம் ஆயத்த ஆடை, பங்கு வர்த்தகத்தில்  ஈடுபட்டு அதிக லாபம் ஈட்டி வரும் சூழலில் ஈஷா குரூப்  நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி தருவதாக கவர்ச்சிகரமான வார்த்தைகளை கூறினார். அவரது வார்த்தைகளை நம்பி உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் என நூற்றுக்கணக்கானோர் சுமார் 40 கோடி ரூபாய் வரை முதலீடு செய்த நிலையில்
திடீரென தலைமறைவாகி விட்டார். எனவே நாங்கள் முதலீடு செய்த பணத்தை திரும்ப பெற்றுத் தர வேண்டும் என குறிப்பிட்டு இருந்தனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட ஹரி பரந்தாமன் கூறுகையில், "திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கணக்கானோர் ஈஷா குரூப் நிறுவனத்தில் 40 கோடி ரூபாய் வரை முதலீடு செய்துள்ளோம். கடந்த மாதம் நேரில் சென்று பணத்தை திரும்ப கேட்டபோது, அடியாட்கள் துணையுடன் பணம் தர முடியாது என மறுத்து எங்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தார். வீடு, நகைகளை விற்று அந்நிறுவனத்தில் முதலீடு செய்தோம். எங்கள் பணம் மொத்தமும் பறிபோய் விட்டது. தற்போது, அவர் வெளிநாடு தப்பி சென்று விட்டார் என கூறப்படுகிறது. எனவே தக்க நடவடிக்கை எடுத்து தங்கள் பணத்தை மீட்டு தர வேண்டும்" என கோரிக்கை விடுத்தார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com