"கைதியின் அடிப்படை உரிமைகளை சிறைக் கதவுகள் பிரிக்காது" உயர் நீதிமன்றம் உருக்கம்!

"கைதியின் அடிப்படை உரிமைகளை சிறைக் கதவுகள் பிரிக்காது" உயர் நீதிமன்றம் உருக்கம்!
Published on
Updated on
1 min read

கைதியும், அவரது அடிப்படை உரிமைகளும் சிறைக் கதவுகளில் பிரிந்து விடுவதில்லை எனத் தெரிவித்த சென்னை உயர்நீதிமன்றம், ஆயுள் தண்டனை கைதிக்கு 40 நாட்கள் விடுப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக, கொலை வழக்கில் செல்வம் என்பவருக்கு திருநெல்வேலி நீதிமன்றம், மரண தண்டனை விதித்திருந்தது. பின்னர், அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.   கடந்த 1994ம் ஆண்டு முதல் தண்டனை அனுபவித்து வரும் அவர், தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், குழந்தைகளின் படிப்புக்கு ஏற்பாடு செய்யவும், வீட்டை பழுதுபார்க்கவும் 40 நாட்கள் விடுப்பு கோரி சிறைத்துறைக்கு விண்ணப்பித்தார். அதன் மீது எந்த முடிவும் எடுக்கப்படாததால், விடுப்பு வழங்க உத்தரவிடக் கோரி செல்வம், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த மனுவை நீதிபதிகள் சுந்தர் மற்றும் சக்திவேல் அமர்வு விசாரித்தது. அப்போது, கடந்த 29 ஆண்டுகளில் 15 முறை விடுப்பில் வெளி வந்துள்ளதாகவும், அந்த சமயங்களில் எந்த அசம்பாவித சம்பவங்களிலும் ஈடுபடாமல், குறிப்பிட்ட நாட்களில் மீண்டும் சரணடைந்துள்ளதாகவும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

சிறை நன்னடத்தை அதிகாரி, விடுப்பு வழங்கலாம் என அறிக்கை அளித்துள்ளதாகவும், மனுதாரரின் விண்ணப்பம் பரிசீலிக்கப்படும் எனவும் அரசுத்தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ஏற்கனவே காவல் துறை பாதுகாப்புடன் 15 முறை உயர்நீதிமன்றம் விடுப்பு வழங்கியுள்ளதைச் சுட்டிக்காட்டி, சிறைக் கதவுகளின் முன், கைதியும், அவரது அடிப்படை உரிமைகளும் பிரிந்து விடுவதில்லை எனக் கூறி, 40 நாட்கள் பாதுகாப்புடன் விடுப்பு வழங்கி உத்தரவிட்டனர். 

மேலும், காவல் துறை பாதுகாப்புடன் வழங்கப்படும் விடுப்பு என்பது மனுதாரரை வீட்டுக் காவலில் வைத்திருப்பதாக கருதக் கூடாது எனவும் தெரிவித்துள்ளனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com