கள்ளக்குறிச்சியில் புகார் அளிக்கச் சென்ற தன்னிடம், காவல் துணைக் கண்காணிப்பாளர் கலையரசன் பாலியல் ரீதியாக அத்துமீறியதாக அன்னலட்சுமி என்ற பெண் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இந்தக் குற்றச்சாட்டை டிஎஸ்பி மறுத்துள்ள நிலையில், குடும்பச் சொத்து தொடர்பான பிரச்சினையில் வழக்குப் பதிவு செய்யாததால் அன்னலட்சுமி பொய்யான புகார் அளிப்பதாக அவரது உறவினர் ஒருவர் வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார்.
கள்ளக்குறிச்சியை சேர்ந்த அன்னலட்சுமி, கடந்த (ஆகஸ்ட் 27) ஆம் தேதி காலை தனது பக்கத்து வீட்டைச் சேர்ந்த உறவினரான ஐஸ்வர்யா, சித்ரா மற்றும் ராஜேந்திரன் ஆகியோர் தன்னைத் தாக்கியதாகக் கூறியுள்ளார். இதில் காயமடைந்த அவர், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாகச் சிகிச்சை பெற்றதாகவும் தெரிவித்துள்ளார். அப்போது கள்ளக்குறிச்சி காவல் நிலைய போலீசார் மருத்துவமனைக்கு வந்து தனது வாக்குமூலத்தைப் பெற்றுச் சென்றதாகவும், இதுதொடர்பாக CSR எண் 1220/2026 வழங்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஆனால், புகார் அளித்து பலமுறை காவல் நிலையத்திற்குச் சென்றும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், கள்ளக்குறிச்சி காவல் துணைக் கண்காணிப்பாளரிடமும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் புகார் அளித்தும் பலன் கிடைக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார். இதையடுத்து, கடந்த (செப் 28) மற்றும்( அக் 14) ஆகிய தேதிகளில் விழுப்புரம் சரக காவல்துறை துணைத் தலைவரிடம் புகார் அளித்ததாகவும் கூறியுள்ளார்.
இதன் தொடர்ச்சியாக, கடந்த (அக்16)-ம் தேதி காலை தனது மகன் மற்றும் வழக்கறிஞருடன் கள்ளக்குறிச்சி டிஎஸ்பி கலையரசனைச் சந்திக்கச் சென்றதாக அன்னலட்சுமி தெரிவித்துள்ளார். சுமார் இரண்டு மணி நேரம் காத்திருந்த பிறகு, பகல் 12.30 மணியளவில் டிஎஸ்பி தங்களை அழைத்ததாகவும், அப்போது தனது மகனையும் வழக்கறிஞரையும் வெளியே அனுப்பிவிட்டு, தனது செல்போனையும் வாங்கி வைத்துக்கொண்டதாகவும் புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
தனது புகார் தொடர்பாக விழுப்புரம் சரக காவல்துறை துணைத் தலைவரைச் சந்தித்தது குறித்து டிஎஸ்பி விசாரித்ததாகவும், அப்போது தனது செல்போனில் இருந்த தாக்குதல் சம்பவத்தின் வீடியோவைப் பார்த்து அவதூறாகப் பேசியதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், அந்த வீடியோவில் தன்னைப் பெண் ஒருவர் இழிவாகப் பேசியதைக் குறிப்பிட்டு, தன் மீதே வழக்குப் பதிவு செய்வேன் என்றும், சம்பந்தப்பட்டவர்கள் மீது FIR பதிவு செய்ய மாட்டேன் என்றும் டிஎஸ்பி கூறியதாக அன்னலட்சுமி தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமின்றி, “என் கூட பாலியல் உறவில் இருக்கனும்” என தன்னுடன் பாலியல் உறவு வைத்துக்கொண்டால் மட்டுமே அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்வதாகக் கூறியதாகவும், தனது கழுத்தில் கைவைத்து பாலியல் ரீதியாகத் தொட்டதாகவும் புகார் மனுவில் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்து டிஎஸ்பியின் கையைத் தட்டிவிட்டதாகவும், பின்னர் சிறிது நேரம் யோசித்துப் பதில் சொல்லுமாறு கூறி வெளியே அனுப்பியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதன் பிறகு, தனது புகார் மீது FIR பதிவு செய்ய முடியாது எனக் கூறி தன்னை வெளியே அனுப்பியதாகவும், தனது வழக்கறிஞரையும் அவதூறாகப் பேசியதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்த சம்பவம் சமூக வைளதளங்களில் வைரலான நிலையில், தன் மீது சுமத்தப்பட்டுள்ள பாலியல் சீண்டல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை என கள்ளக்குறிச்சி டிஎஸ்பி கலையரசன் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக நமது செய்தியாளர் கலையரசனை தொடர்பு கொண்டு பேசிய போது “அன்னலட்சுமி தன் மீது வைத்துள்ள புகார் முழுக்க முழுக்க பொய்யானது எனவும், ஐஸ்வர்யா மீது புகார் பதிவு செய்யவேண்டும் என்றும் அழுத்தம் கொடுத்தே, தன் மீது அவதூறு பரப்புவதாகவும், அன்னலட்சுமியை விசாரிக்கும் போது மற்ற காவலர்கள் அறையில் இருந்ததாகவும், இது குறித்து SP- யிடம் விளக்கமளித்திருக்கிறேன்” எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் இது தொடர்பாக அன்னலட்சுமியின் கணவரின் அண்ணன் மகளான ஐஸ்வர்யா என்பவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், குடும்பச் சொத்து தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே பிரச்சினை இருந்து வருவதாகவும், அந்த விவகாரத்தில் டிஎஸ்பி வழக்குப் பதிவு செய்யாததால் அவர் மீது அன்னலட்சுமி பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாகவும் தெரிவித்துள்ளார். இது குறித்து DSP மற்றும் அவருடன் அறையில் இருந்த காவலர்களிடம் விசாரணை நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது. டிஎஸ்பி மீது பெண் ஒருவர் பாலியல் சீண்டல் புகார் அளித்துள்ள சம்பவம் கள்ளக்குறிச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.