தலை மேல் கல்லைப் போட்டு பெண்ணைப் படுகொலை!!!

தலை மேல் கல்லைப் போட்டு பெண்ணைப் படுகொலை!!!

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே தலையில் கல்லை போட்டு பெண் கொலை. உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை. கற்பழித்து கொலை செய்யப்பட்டாரா என விசாரணை நடைப்பெற்று வருகிறது.
Published on

ஊதியூர் அருகே நிழலி கிராமம், வஞ்சிபாளையம், கரியாக்கவுண்டன் புதூர் பகுதியை சேர்ந்த ரத்தனசாமி என்பவரின் மனைவி ரேவதி(35). இவர் தனது மகன் ஹரிஷ்(8) மற்றும் கணவருடன்  வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் ரேவதி வஞ்சிபாளையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பனியன் கம்பெனிக்கு வேலைக்கு சென்று வந்துள்ளார்.

மேலும் வேலை முடிந்து தனது வீட்டிற்கு செல்வதற்கு ரேவதி காட்டுப்பாதை வழியாக நடந்து வருவது வழக்கம். இந்த நிலையில் ரேவதி நேற்று காலை வழக்கம் போல கம்பெனிக்கு வேலைக்கு சென்றுள்ளார். பின்னர் மாலை சுமார் 3 மணி அளவில் வேலை முடிந்து வீட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது. ஆனால் வெகு நேரம் ஆகியும் ரேவதி வீட்டுக்கு வரவில்லை.

அதைத்தொடர்ந்து ரேவதியின் உறவினர்கள் இன்று  காலை ரேவதி வேலை முடிந்து நடந்து வரும் காட்டுவழிப் பாதையில் தேடி கொண்டு சென்றுள்ளனர். அப்போது ரேவதி நடந்து வரும் காட்டுவழிப் பாதையில் கண்ணாங்காட்டு தோட்டம் பகுதியில் வரும் போது ரேவதியின் மதிய உணவு பை மற்றும் ரேவதியின் செருப்பு ஆகியவை கிடந்துள்ளது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரேவதியின் உறவினர்கள் அப்பகுதியில் சுற்றி பார்த்தனர்.

அப்போது அப்பகுதியில் செல்லும் பி.ஏ.பி கிளை வாய்க்கால் கரையோரம் உள்ள ஒரு முட்புதர் அருகே ரேவதியின் உடல் கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்தது. தலையில் கல்லை போட்டு கொலை செய்துள்ளனர்.இதையடுத்து உடனடியாக ஊதியூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். ஊதியூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் திருப்பூரில் இருந்து மோப்ப நாய் டெவில் வரவழைக்கப்பட்டது. மோப்பநாய் சடலம் கிடந்த இடத்தில் இருந்து சிறிது தூரம் மோப்பம் பிடித்தவாறு ஓடி நின்றது. கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்து ஆய்வு மேற்கொண்டனர்.காங்கேயம் துணை போலீஸ் சூப்பிரண்டு பார்த்திபன் காங்கேயம் காவல் ஆய்வாளர் காமராஜ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் போலீசார் ரேவதியின் உடலை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஊதியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி, குற்றவாளியை தீவிரமாக தேடி வருகின்றனர். 

கரியாக்கவுண்டன் புதூர் பகுதியில் உடல்நிலை பாதிக்கப்பட்ட கணவனையும் 8 வயதுடைய தனது மகனையும் காப்பாற்ற குடும்ப சூழ்நிலையின் காரணமாக வேலைக்கு சென்ற பெண்ணை தலையில் கல்லை போட்டு கொன்றது இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com