கன்னியாகுமரி மாவட்டம், இரணியல் அருகே உள்ள காடேற்றி குளத்தின் கரையோரத்தில் நேற்று சனிக்கிழமை (செப் 19) காலை பைக் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. மேலும், குளத்தின் படித்துறையில் ரத்தக் கறைகள் இருந்ததுடன், செல்போன், ஆதார் அட்டை, சில்வர் செயின், ஆண்கள் அணியும் கடுக்கன், மதுபாட்டில்கள் உள்ளிட்ட பொருட்கள் சிதறிக் கிடந்தன. எனவே அப்பகுதி மக்கள் சந்தேகமடைந்து குளத்திற்குள் எட்டி பார்த்த போது சடலம் ஒன்று மிதந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்து உடனடியாக இரணியல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அன்ஜுல் நாகர் தலைமையில் இரணியல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். தீயணைப்புப் படையினர் உதவியுடன் குளத்திற்குள் கிடந்த சடலத்தை மீட்ட போலீசார், உடலை பிரேதப் பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குளக்கரையில் கிடந்த பொருட்கள் மற்றும் பைக் ஆகியவற்றை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினர். இதில், உயிரிழந்தவர் பூதப்பாண்டி அருகே திட்டுவிளை பகுதியைச் சேர்ந்த கொத்தனார் வேலை செய்து வந்த 31 வயதுடைய ராஜேஷ் என்பதும், திருமணமாகாதவர் என்பதும் தெரியவந்தது.
இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் ஆல்பின் ராஜேஷ் கொலை செய்யப்பட்டு குளத்தில் வீசப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணையை தீவிரப்படுத்தினர். சம்பவம் நடைபெற்ற பகுதியில் செயல்பாட்டில் இருந்த செல்போன் எண்களை ஆய்வு செய்ததுடன், சிசிடிவி காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்தனர். இதன் அடிப்படையில், குருந்தன்கோடு அருகே முக்கலம்பாடு பகுதியைச் சேர்ந்த சார்லி ஜோஸ் (36), அவரது நண்பர்களான பேயோடு பகுதியைச் சேர்ந்த சுபின் (21), செக்காரவிளை பகுதியைச் சேர்ந்த சுமன் (40) ஆகிய 3 பேரை போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், சார்லி ஜோஸ் சிவில் இன்ஜினியரிங் பட்டதாரியான இவர் வெளிநாட்டில் வேலை செய்து வந்த போது கடந்த 2019ஆம் ஆண்டு தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த செவிலியர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். திருமணத்திற்காக சொந்த ஊர் திரும்பிய சார்லி ஜோஸ், பின்னர் சென்னையில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனத்தில் கடந்த 5 ஆண்டுகளாக பணியாற்றி வந்ததாக கூறப்படுகிறது.அங்கு பணியில் சேர்ந்தபோது, மற்றொரு கட்டுமான நிறுவனத்தில் கொத்தனாராக வேலை பார்த்த ஆல்பின் ராஜேஷுடன் சார்லி ஜோஸுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
பின்னர் இருவரும் ஒரே அறையில் தங்கி வேலை செய்து வந்திருக்கின்றனர் அப்போது, ஒரு நாள் சார்லி ஜோஸ் மது போதையில் தூங்கிக் கொண்டிருந்தபோது, அவரது மனைவி செல்போனில் தொடர்பு கொண்டதாகவும், அந்த அழைப்பை ஆல்பின் ராஜேஷ் எடுத்துப் பேசியதாகவும் கூறப்படுகிறது. பின்னர் சார்லி ஜோஸின் மனைவியை ஆல்பின் ராஜேஷ் தொடர்ந்து செல்போனில் தொடர்பு கொண்டு தொந்தரவு செய்ததாகவும், பின்னர் “என்னுடன் உல்லாசமாக இருக்க வரியா” என அவருடன் தனியாக தங்க அழைத்ததாகவும் போலீசாரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மனைவி சார்லி ஜோஸிடம் தெரிவித்ததால், இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டதாகவும், இதையடுத்து ஆல்பின் ராஜேஷ் அந்த அறையை காலி செய்து சென்றதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், தேவாலய திருவிழாவுக்காக சார்லி ஜோஸ் தனது சொந்த ஊரான முக்கலம்பாடுக்கு வந்துள்ளார். அப்போது வெள்ளிக்கிழமை மாலை குருந்தன்கோடு பகுதியில் உள்ள மதுக்கடைக்கு சென்றபோது, 5 ஆண்டுகளுக்குப் பிறகு ஆல்பின் ராஜேஷை சந்தித்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து ஆல்பின் ராஜேஷின் செல்போன் எண்ணை பெற்ற சார்லி ஜோஸ், அவரை கொலை செய்ய திட்டமிட்டடுள்ளார். அதன்படி, வெள்ளிக்கிழமை (செப் 17) இரவு ஆல்பின் ராஜேஷை செல்போனில் தொடர்பு கொண்ட சார்லி ஜோஸ், நீண்ட நாட்களாக சந்திக்கவில்லை என்றும், ஊரில் திருவிழா நடைபெறுவதால் கறி விருந்து மற்றும் மது பார்ட்டி ஏற்பாடு செய்திருப்பதாகவும் கூறி காடேற்றி குளக்கரைக்கு அழைத்துள்ளார். சார்லி ஜோஸ் அழைத்ததன் பேரில் பைக்கில் வந்த ஆல்பின் ராஜேஷை, ஏற்கெனவே அங்கு வந்திருந்த சுபின் மற்றும் சுமன் ஆகியோருடன் சேர்ந்து ஒன்றாக அமரவைத்துள்ளார். .
பின்னர் ஆல்பின் ராஜேஷுக்கு மது ஊற்றி கொடுத்ததாகவும், பின்னர் தனது மனைவிக்கு செல்போனில் தொடர்பு கொண்டு தொந்தரவு செய்தது குறித்து சார்லி ஜோஸ் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் சொல்லப்படுகிறது. அப்போது ஏற்பட்ட தகராறில், மூவரும் சேர்ந்து ஆல்பின் ராஜேஷை தாக்கியதாகவும், குளத்தின் படித்துறையில் அவரது தலையை மோதி கொலை செய்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். பின்னர் அவரது ஆடைகளை கழற்றி தீ வைத்து எரித்துவிட்டு, சடலத்தை குளத்திற்குள் வீசியதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஆல்பின் ராஜேஷை கொலை செய்த பின்னர், சார்லி ஜோஸ் தனது மனைவியை செல்போனில் தொடர்பு கொண்டு நடந்த சம்பவம் குறித்து தெரிவித்துள்ளார். இதைக் கேட்ட அவரது மனைவி, “நீங்கள் செய்தது தவறு” என்றும், போலீசாரிடம் சரணடையுமாறும் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால், குளத்தில் வீசப்பட்ட சடலம் மிதக்காது என்றும், கொலைக்கான ஆதாரங்கள் போலீசாரிடம் சிக்காது என்றும் கருதி சார்லி ஜோஸ் தனது நண்பர்களுடன் சேர்ந்து அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கியிருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். ஆனால், செல்போன்களை அணைக்காமல் பயன்படுத்தியதால், அவர்களின் செல்போன் டவர் லொக்கேஷனை வைத்து போலீசார் 3 பேரையும் கண்டுபிடித்து கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சார்லி ஜோஸ், சுபின் மற்றும் சுமன் ஆகிய 3 பேர் மீதும் இரணியல் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவர்களை இரணியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நாகர்கோவில் மாவட்ட சிறையில் அடைத்தனர். கொலை நடந்த சில மணி நேரங்களிலேயே குற்றவாளிகளை கைது செய்த இரணியல் காவல் நிலைய ஆய்வாளர் அந்தோணியம்மாள் மற்றும் போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அன்ஜுல் நாகர் பாராட்டினார். 5 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட பிரச்சினையை மனதில் வைத்து, “கறி விருந்து, மது பார்ட்டி” எனக் கூறி இளைஞரை அழைத்து சென்று கொலை செய்து குளத்தில் வீசியதாக கூறப்படும் சம்பவம் கன்னியாகுமரி மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்