“நள்ளிரவில் குத்தி கொல்லப்பட்ட வாலிபர்” - பிஞ்சு குழந்தையை பார்க்காமல் இறந்த தந்தை.. தெருவிளக்கை அணைக்காததால் தகராறு!

சைரஸ், தான் வைத்திருந்த கத்தியால் கவினைக் குத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்..
Kanyakumari Kavin Murder Case
Kanyakumari Kavin Murder Case
Published on: 
Updated on: 
2 min read

கன்னியாகுமரி மாவட்டம், கொட்டாரம் அருகே தாமரைப்பூ பறிப்பதற்கு இடையூறாக இருந்ததாகக் கூறி, புதிதாகத் தந்தையான 27 வயது இளைஞர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகி உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம், கொட்டாரம் அருகே உள்ள அச்சன்குளம் செல்வன் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் 27 வயதான கவின். இவர் அழகப்பபுரம் பேரூராட்சியில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றி வந்தார். இவருக்குத் திருமணமாகி, சில நாட்களுக்கு முன்புதான் ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இந்நிலையில், கடந்த முன்தினம் இரவு கவின் அழகப்பபுரம் மீன்கடை தெருவில் நின்றுகொண்டிருந்தார். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த தாமரைப்பூ பறிக்கும் தொழிலாளியான 39 வயதுடைய சைரஸ் உள்ளிட்ட சிலர் அங்கு வந்துள்ளனர். அப்போது கவினுக்கும் சைரஸுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த சைரஸ், தான் வைத்திருந்த கத்தியால் கவினைக் குத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இந்தத் தாக்குதலில் பலத்த காயமடைந்த கவின் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அன்சூர் நாகர் மற்றும் அஞ்சுகிராமம் போலீசார், கவினின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், கொலை தொடர்பாக இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு, குற்றவாளிகளைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. இதற்கிடையே, வட்டக்கோட்டை பகுதியில் பதுங்கியிருந்த சைரஸை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், இந்தக் கொலையில் லட்சுமிபுரத்தைச் சேர்ந்த செந்தில்நாதன் (40), அழகப்பபுரம் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட மாணவரணித் தலைவருமான முத்துக்குமார் (36), மேலும் 18 வயதுடைய பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் ஆகியோருக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

Kanyakumari Kavin Murder Case
Kanyakumari Kavin Murder Case

இதையடுத்து, சைரஸ் உள்ளிட்ட நான்கு பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். பின்னர், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசாரின் விசாரணையில், செங்குளத்தில் இரவு நேரங்களில் சட்டவிரோதமாகத் தாமரைப்பூ பறித்து வந்ததாக சைரஸ் வாக்குமூலம் அளித்ததாகக் கூறப்படுகிறது. கவின் அழகப்பபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தெருவிளக்குகளை இயக்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால், செங்குளத்தின் கரையில் உள்ள தெருவிளக்குகள் எரிந்துகொண்டிருந்ததால், இரவு நேரங்களில் தாமரைப்பூ பறிப்பதற்குத் தடையாக இருந்ததாக சைரஸ் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் கவினைக் கொலை செய்தால்தான் தொடர்ந்து தாமரைப்பூ பறிக்க முடியும் என்று நினைத்ததாகவும், அதன்படி கடை முன்பு நின்றுகொண்டிருந்த கவினைக் கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு, பாலிடெக்னிக் மாணவரின் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றதாகவும் அவர் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி சில நாட்களிலேயே ஆண் குழந்தைக்குத் தந்தையான இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com