காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு மெயின் ரோடு பகுதியை சேர்ந்த தேவமணி, பா.ம.க. மாவட்ட செயலாளராக இருந்துள்ளார். கடந்த 22-ம் தேதி இரவு கட்சி அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு பைக்கில் சென்ற அவரை, 7 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து, சரமாரியாக வெட்டிக் கொலை செய்தது. இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த 28 மற்றும் 19 வயதுடைய இரு வாலிபர்களை, மயிலாடுதுறையில் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது, கொலை செய்யப்பட்ட தேவமணிக்கும் மணிமாறனுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும், இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த பிரச்சனையில், மணிமாறன் தமது கூட்டாளிகளுடன் சேர்ந்து, கூலிப்படையினர் உதவியுடன் தேவமணியை கொலை செய்ததாக தெரிகிறது. இதனையடுத்து, மணிமாறன், கலியமூர்த்தி, இராமச்சந்திரன், அருண் ஆகிய நான்கு பேரை கைது செய்த போலீசார், கொலைக்கு பயன்படுத்தப்பட்ட அரிவாள், பைக் மற்றும் செல்போன்களை பறிமுதல் செய்துள்ளனர்.
கைதான நபர்களில் கலியமூர்த்தி என்பவர், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வரக் கூடியவர் என தெரியவந்தது. இதனையடுத்து, கொலையின் பின்னணி சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.