கர்நாடக மாநிலம் தட்சிண கன்னட மாவட்டம் பந்த்வால் நகரில் உள்ள கே.எஸ்.ஆர்.டி.சி. பேருந்து நிலையத்தில் இளம்பெண் லாவண்யா என்பவர் கடந்த (ஜூலை 16) ஆம் தேதி கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில், முக்கிய குற்றவாளியான சேத்தனை காவல்துறையினர் முறைப்படி கைது செய்துள்ளனர். சம்பவம் நடந்து 11 நாட்களுக்குப் பிறகு நடைபெற்ற இந்த கைது, வழக்கு விசாரணையில் முக்கிய திருப்பமாகக் கருதப்படுகிறது. பெல்தங்கடி அருகே ஓடில்நாலா பகுதியைச் சேர்ந்த சேத்தன், கடந்த ஜூலை 16-ஆம் தேதி கக்கேபதவு பகுதியைச் சேர்ந்த லாவண்யாவை பேருந்து நிலையத்தில் கூர்மையான கத்தியால் சரமாரியாக தாக்கி கொலை செய்து விட்டு அங்கிருந்து காரில் தப்பி சென்றார்.
சம்பவத்துக்குப் பிறகு மங்களூரில் வைத்து சேத்தனை காவல்துறையினர் பிடித்தனர். அப்போது அவர் விஷம் அருந்தியிருந்தது தெரியவந்ததால், உடனடியாக பந்த்வால் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக மங்களூரில் உள்ள வென்லாக் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். வென்லாக் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த சேத்தனின் உடல்நிலை படிப்படியாக சீரடைந்ததைத் தொடர்ந்து, அவர் பொது வார்டுக்கு மாற்றப்பட்டார். முழுமையாக உடல்நலம் தேறியதை அடுத்து, மருத்துவர்களின் அனுமதியுடன் (ஜூலை 27) ஆம் தேதி பந்த்வால் நகர காவல்துறையினர் அவரை முறைப்படி கைது செய்தனர்.
இந்த கொலை வழக்கு தொடர்பாக பந்த்வால் நகர காவல் ஆய்வாளர் அனந்த பத்மநாபா தலைமையிலான போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் லாவண்யாவின் துரத்து உறவினரான சேத்தன் நீண்ட நாட்களாக அவரை ஒருதலை பட்சமாக காதலித்து வந்ததாகவும், ஆனால் இளம் பெண் அந்த காதலுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வாலிபர் சம்பவத்தன்று இளம் பெண்ணிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை குத்தி கொலை செய்ததாக சொல்லப்படுகிறது. இருப்பினும் போலீசார் கொலைக்கான முழு பின்னணி, இருவருக்கும் இடையிலான தொடர்பு மற்றும் சம்பவத்திற்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பேருந்து நிலையத்தில் இளம்பெண் ஒருவர் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் கர்நாடகாவில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்திய நிலையில், முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டிருப்பது வழக்கு விசாரணையில் முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.