
கர்நாடக மாநிலம், ஷிவமொக்காவை சேர்ந்தவர் 39 வயதான ரகு. இவரது மனைவி 36 வயதான சுவேதா இவர்களுக்கு திருமணமாகி 7 வருடங்கள் ஆகும் நிலையில், 6 வயது பெண் குழந்தை உள்ளது. திருமணமான தொடக்கத்திலிருந்தே தம்பதிகளுக்குள் கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது. எனவே கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு இருவரும் சட்டபூர்வமாக விவாகரத்து செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர்.
அதன்படி விவகாரத்திற்கும் விண்ணப்பித்துள்ளனர். சுவேதா விவாகரத்து வரும் வரை கணவருடன் தங்க முடிவு செய்து இருவரும் ஒரே வீட்டில் தங்கி வாழ்ந்து வந்துள்ளனர். இருவரும் அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் குழந்தையை ரகுவின் தாய் தனது வீட்டில் வைத்து வளர்த்து வந்துள்ளார். வாரம் ஒருமுறை மட்டும் கணவன் மனைவி சென்று குழந்தையை பார்த்து விட்டு வந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் (ஜூன் 09) ரகுவின் தாய் வீட்டிற்கு சென்ற சுவேதா குழந்தையை தன்னுடன் அழைத்து கொண்டு தனது சொந்த ஊரான ஹாசன் மாவட்டத்திற்கு சென்றுள்ளார். அங்கு குழந்தையை நிலத்திற்கு அழைத்து சென்ற சுவேதா தண்ணீர் தொட்டியில் குழந்தையை அழுத்தி கழுத்தின் மீது கால் வைத்து நெரித்துள்ளார். வலி தாங்க முடியாமல் குழந்தை சத்தம் போட்டுள்ளது.
குழந்தையின் சத்தத்தைக் கேட்டு வந்த அருகிலிருந்த விவசாயிகளை மயங்கிய நிலையில் இருந்த குழந்தையை வெளியில் எடுத்துள்ளனர். பின்னர் என் இப்படி செய்தாய் என சுவேதாவிடம் கேட்க “நானும் என் குழந்தையும் தற்கொலை செய்து கொள்ளத்தான் இங்கு வந்தோம் என்னை விடுங்கள் நான் கிணற்றில் குதிக்க வேண்டும்” என கூறி நாடகமாடி உள்ளார்.
குழந்தையை விவசாயிகள் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில் பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். உடனடியாக இது குறித்து போலீசாருக்கும் குழந்தையின் தந்தைக்கும் தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் சுவேதாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் குழந்தையை விவகாரத்திற்கு பிறகு தனது கணவரிடம் கொடுக்க வேண்டுமோ என்ற அச்சத்திலும் கவலையிலும் குழந்தையை கொன்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
ஆனால் இதை மறுக்கும் சுவேதாவின் கணவர் ரகு “ சுவேதாவிற்கு உடன் வேலை செய்யும் நபருடன் தகாத உறவு இருந்து வருவதாகவும் இதனால் தான் அவர்களுக்குள் சண்டை வந்ததாகவும். விவகாரத்திற்கு பிறகு அந்த உறவுக்கு குழந்தை தடையாக இருக்க கூடாது என நினைத்தே சுவேதா கொலை செய்ததாக” தெரிவித்துள்ளார்.
பெற்ற குழந்தையை தண்ணீர் தொட்டியில் போட்டு தாயே கொன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பையும், குடும்பத்தார் இடையே சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சுவேதாவிற்கு தாய் தந்தை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்