“நள்ளிரவில் வெட்டிக் கொல்லப்பட்ட மாற்றுத்திறனாளி” - சடலத்தை பார்த்து கதறிய தந்தை.. சொத்துக்காக தம்பியே கொலை செய்தாரா?

இதனால், பொன்னியம்மாள் தனது இளைய மகன் மயிலழகனுடன் தனியாக வசித்து வந்துள்ளார்...
Katpadi Property Dispute Murder
Katpadi Property Dispute Murder
Published on: 
Updated on: 
2 min read

வேலூர் மாவட்டம், காட்பாடி அருகே சொத்துப் பிரச்சினை காரணமாக ஒரு கை இழந்த இளைஞர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தலையின் பின்புறத்தில் வெட்டுக்காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரது உடலை மீட்ட போலீசார், ஏற்கனவே அண்ணன் - தம்பிக்கு இடையே சொத்துத் தகராறு இருந்து வந்ததாகக் கூறப்படும் நிலையில், தம்பியை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த எல்ஜி புதூர் பகுதியைச் சேர்ந்தவர் 48 வயதுடைய பெருமாள். இவரது மனைவி பொன்னியம்மாள். இந்தத் தம்பதிக்கு 25 வயதில் தினகரன் மற்றும் 23 வயதில் மயிலழகன் என இரண்டு மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில், இரு மகன்களுக்கும் இடையே சொத்து பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, குடும்பத்திற்கு சொந்தமான நிலம் பாகப்பிரிவினை செய்யப்பட்டு, மூத்த மகன் தினகரனுக்கு 8 ஏக்கரும், இளைய மகன் மயிலழகனுக்கு 4 ஏக்கரும் ஒதுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. விவசாயப் பணியில் ஈடுபட்டிருந்த போது ஏற்பட்ட விபத்தில் தினகரன் தனது வலது கையை இழந்துள்ளார். இதனால், அவருக்கு கூடுதலாக 4 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே, பாகப்பிரிவினை காரணமாக குடும்பத்தில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், பொன்னியம்மாள் தனது இளைய மகன் மயிலழகனுடன் தனியாக வசித்து வந்துள்ளார்.

Katpadi Property Dispute Murder
Katpadi Property Dispute Murder

அதே போல தினகரன் தனது தந்தை பெருமாள் மற்றும் பாட்டி பச்சையம்மாள் உடன் நிலத்தில் உள்ள தனி வீட்டில் வசித்து வந்துள்ளார். தனக்குப் பிரித்துக் கொடுக்கப்பட்ட 8 ஏக்கர் நிலத்தில் தினகரன் விவசாயம் செய்து வந்த நிலையில் மேலும், மாநில நெடுஞ்சாலையை ஒட்டிய தனது நிலத்தில் புதிதாக நான்கு கடைகளையும் கட்டியுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை(நவ 22) அந்தக் கடைக்கு கிரகப்பிரவேசம் நடைபெற்றுள்ளது. புதிய கடையில் யாராவது தங்க வேண்டும் என்பதற்காக அன்று இரவு அவரது தந்தை பெருமாள் மற்றும் பாட்டி பச்சையம்மாள் ஆகியோர் அங்கேயே படுத்துத் தூங்கியுள்ளனர். இதையடுத்து, நேற்று(நவ 23) இரவு சுமார் 10 மணியளவில் தினகரன் மட்டும் தனியாக வீட்டுக்குச் சென்று உறங்கியுள்ளார்.

இந்நிலையில் இன்று(நவ 24) காலை பெருமாள் மற்றும் பச்சையம்மாள் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, தினகரன் தலையின் பின்புறத்தில் வெட்டுக்காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்துள்ளார். இதைப் பார்த்து இருவரும் கதறி அழுதுள்ளனர். அவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து பார்த்து, உடனடியாக விருதம்பட்டு காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், தினகரனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, உறவினர்கள் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்தவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Katpadi Property Dispute Murder
Katpadi Property Dispute Murder

மேலும், சம்பவ இடத்தில் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இதற்கிடையே, மயிலழகனுக்கு ஒதுக்கப்பட்ட 4 ஏக்கர் நிலத்தையும் அவர் விட்டுச் செலவழித்த தாகக் கூறப்படுகிறது. மேலும், தினகரன் புதிதாகக் கட்டிய நான்கு கடைகளில் இரண்டு கடைகளைத் தனக்குத் தர வேண்டும் என்றும், நிலத்தில் கூடுதல் பங்கு வேண்டும் என்றும் மயிலழகன் அடிக்கடி தனது அண்ணனிடம் தகராறு செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், சொத்துத் தகராறு காரணமாக இந்தக் கொலை நடந்திருக்குமா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.