
நெல்லை, ஆக. 13- பாளையங்கோட்டை கே.டி.சி நகரில் ஐடி ஊழியர் கவின் கொலை செய்யப்பட்ட வழக்கில், சிபிசிஐடி போலீசாரால் காவலில் எடுக்கப்பட்ட சுர்ஜித் மற்றும் அவரது தந்தை சரவணனின் 2 நாள் காவல் விசாரணை இன்றுடன் நிறைவடைகிறது. இதையடுத்து இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை சிபிசிஐடி போலீசார் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலத்தை சேர்ந்த ஐ.டி ஊழியர் கவின்(27) கடந்த மாதம் 27-ந்தேதி பாளை கே.டி.சி நகரில் வைத்து சுர்ஜித் என்ற வாலிபரால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவத்தில் சுர்ஜித் மற்றும் அவரது தந்தை சரவணன் ஆகியோர் கைது செய்யப்பட்டு பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் கவின் ஆணவக்கொலை வழக்கு தொடர்பாக, நெல்லை இரண்டாவது கூடுதல் மற்றும் அமர்வு நீதிமன்றத்தின் அனுமதியுடன், தந்தை-மகனை சிபிசிஐடி போலீசார் கடந்த 11ம் தேதி மாலை 6 மணி முதல் தங்களது காவலில் வைத்து விசாரணை நடத்தினர். சிபிசிஐடி எஸ்பி ஜவகர் தலைமையிலான சிறப்புக் குழுவினர், இருவரிடமும் தனித்தனியாக பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையின் முக்கிய கட்டமாக, நேற்று குற்றவாளி சுர்ஜித்தை கொலை நடந்த இடத்திற்கு நேரில் அழைத்துச் சென்று, கொலை செய்த விதம் குறித்து நடித்துக் காட்ட வைத்து ஆதாரங்களை சிபிசிஐடி போலீசார் சேகரித்ததனர். கொலைக்கான சதித்திட்டம், பின்னணி மற்றும் உடந்தையாக இருந்தவர்கள் குறித்து 50-க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டு வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டன.
இந்நிலையில், இரண்டு நாள் காவல் விசாரணை இன்று மாலையுடன் முடிவடைவதை அடுத்து, இருவரையும் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. இதற்காக, நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு இருவரையும் அழைத்துச் சென்று முழு உடல் தகுதி பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. மருத்துவ அறிக்கை பெறப்பட்ட பின்னர், இருவரும் நெல்லை இரண்டாவது கூடுதல் மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள்.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், அவர்கள் மீண்டும் பாளையங்கோட்டை மத்திய சிறையில் நீதிமன்றக் காவலில் அடைக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விசாரணையில் கிடைத்த முக்கியத் தகவல்களின் அடிப்படையில், சிபிசிஐடி தங்களது அடுத்தகட்ட நடவடிக்கையைத் தொடங்கும் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.